சரக்கு பத்தல… சகா விமர்சனம்

சரக்கு பத்தல… சகா விமர்சனம்

கதை என்ன..?

5 இளம் வாலிபர்களின் கதை தான் படத்தின் ஒன்லைன்.

சரண், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டிஆகிய 4 பேரும் படத்தின் நாயகர்கள்.பிரித்விராஜ் இதில் வில்லன்.

இவர்கள் அனைவரும் (தனித்தனியாக) ஏதோ ஒரு குற்றங்களை செய்துவிட்டு அதன் தண்டனையை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுபவித்துவருகிறார்கள்.

இதில் சரண் மற்றும் பாண்டி இருவரும் நல்ல நண்பர்கள்.

அங்குள்ள வில்லன் பிரித்விராஜிடம்சரனுக்கு மோதல் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் தன் நண்பன் பாண்டியை இழக்கிறான் சரண். எனவே அதற்கு காரணமான பிரித்விராஜை சிறையில் இருந்து வெளியே வந்து பழிவாங்க நினைக்கிறான் சரண்.

இதனிடையில் சரனுக்கு மற்றொரு சிறை நண்பன் கிஷோர் உதவுகிறார்.

இவர்களும் ஒரு கட்டத்தில் சிறை வார்டனை தாக்கிவிட்டு ஜெயில் இருந்து தப்பித்து வெளியே வருகின்றனர்.

அதன்பின்னர் என்ன நடந்தது? நினைத்ததை சாதித்தாரா சரண்? இவர்களுக்கு காதலிகளும் இருக்கிறார்கள். அந்த காதல் கை கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி,பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வடசென்னை’ படத்தில் தனுஷின் மச்சனாக அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின்  தம்பியாக நடித்தவர்தான் சரண்.

மேலும் ‘பசங்க’ படத்தில்  சிறுவர்களாக நடித்த கிஷோர், ஸ்ரீராம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

எவரும் எதிர்பாரா வகையில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் பாண்டிராஜ் மகன் பிருத்விராஜ்.

இதில் கிஷோருக்கு கிட்டத்தட்ட அப்பாவி வேடம் தான். ஆனால் ஸ்ரீராமுக்கோ கோபக்கார இளைஞன் வேடம்.

படத்தில் 2 காதல் ட்ராக் இருந்தாலும் முதல் பாதியில் சிறையில் அனைவரும் முறைத்துக் கொண்டே படத்தை ஓட்டி விடுகிறார்கள். சிறையில் அவர்களுக்குள் நடக்கும் மோதலே பிரதானமாக காட்டப்படுகிறது.

நீரஜா மற்றும் ஆய்ரா என இரண்டு நாயகிகள் உள்ளனர். இவர்கள் பேசும் டயலாக்குகளை ஒரு கை விரல்களில் எண்ணிவிடலாம். 5 டயலாக்குகள் கூட இருக்காது.

இவர்கள் இருவரும் நாயகர்களைவிட மூத்தவர்கள் போல் உள்ளனர்.

ஜோக்கர் படத்தில் நடித்த அபிராமி இதில் சரணின் அக்காவாக நடித்துள்ளார். அவருக்கும் பெரிதாக டயலாக் இல்லை.

சிறை வார்டனாக மிரட்டலாக வருகிறார் தீனா. ஆனால் மிரட்டல் உருவத்தில் மட்டுமே.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி?

நிரன்சந்தர் ஒளிப்பதிவு பேசப்படும்வகையில் அமைந்துள்ளது. முதல் பாதியில் நிறைய பேர் முறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை எடிட்டர் ஹரிஹரன் வெட்டியிருக்கலாம்.

‘யாயும்’, ‘ஆத்தாடி’ பாடல்களால் நம்மை ஈர்த்து விடுகிறார் இசையமைப்பாளர் சபீர். யாயும் பாடல் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பே வந்து விட்டது.

ஷபீரின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை கடுப்பேற்றுகிறது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் மியூசிக்கை போட்டு நம்மை பயமுறுத்தி இருக்கிறார்.

ஐந்து நாயகர்களிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் முருகேஷ். ஆனால் ஒவ்வொரு கதையை முழுவதுமாக முடிக்காமல் மாற்றி மாற்றி காட்டியிருப்பதால் மனதில் கதை ஒட்டமறுக்கிறது.

சகா…. சரக்கு பத்தல

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *