நாளை ஆகஸ்ட் 3ல் ரிலீசாகவுள்ள 10 படங்களின் ஃபுல் அப்டேட்ஸ்

நாளை ஆக. 3ஆம் தேதி 10 தமிழ் திரைப்படங்கள் ரிலீசாகிறது.

அந்த படங்கள் என்னென்ன? ஒரு பார்வை இதோ…

1. கஜினிகாந்த் – ‘ஹரஹரமகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். சந்தோஷ் பி.ஜெயகுமார் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களும் ‘A’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியான நிலையில் இந்த படம் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாக இருக்கிறது. பாலுமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை பல்லு கவனித்துள்ளார்.

2. மணியார் குடும்பம் – முரளி நடிப்பில் ‘மனுநீதி’, வடிவேலு நடிப்பில் ’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கிய தம்பி ராமையா 10 அண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் இது. தம்பி ராமையாவே தயாரித்து, இசை அமைத்து இயக்கியுள்ள இந்த படத்தில் அவரது மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, மிருதுலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, ராதாரவி, சிங்கம் புலி, யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கும் இப்படம் காமெடி கலந்த என்டர்டெயிமென்ட் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வர்மா கவனித்துள்ளார். ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்திற்கு பிறகு உமாபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை தமிழகமெங்கும் சக்திவேலனின் ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

3. எங்கள் காட்டுல மழை – விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்க, ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், அப்புக்குட்டி, அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படம் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள்: ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

4. கடல் குதிரைகள் – சத்யராஜ் நடித்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ செல்வா நடித்த ‘மைந்தன்’, குஷ்பு, சுஜிதா நடித்த ‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘உள்ளக்கடத்தல்’ ஆகிய படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் ‘தலைவாசல்’ விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் ‘கடல் குதிரைகள்’. ‘காற்றுக்கென்ன வேலி’ படத்தைப் போலவே இப்படமும் இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து விளக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களாக ‘வேதம் புதிது’ தேவேந்திரன், சியாம சந்திரன், பட்டுசாமி, கே.தணிகாசலம் முதலானோர் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இலங்கை – ஜாஃப்னாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5. கடிகார மனிதர்கள் – வைகறை பாலன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கிஷோர், கருணாகரன், ஷெரின், பாலாசிங் முதலானோர் நடிக்கிறார்கள். நடுத்தர குடும்பத்து மக்களின் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். சங்கர் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

6. காட்டுப்பய சார் இந்த காளி – ‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ‘மத்திய சென்னை’ படத்தில் நடித்த ஜெய்வந்த் கதாநாயகனாகவும், புதுமுகம் ஐரா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பிழைப்புக்காக வட இந்தியாவிலிருந்து வருபவர்களில் சிலரால் ஏற்படும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் இது! ‘ பிழைக்க வரலாம் ஆனால் ஆள வரக்கூடாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளதாக இயக்குனர் யுரேகா கூறியுள்ளார். இந்த படத்திற்கு விஜய் சங்கர் இசை அமைத்துள்ளார். மணிபெருமாள் ஒளிப்ப்திவு செய்துள்ளார்.

7. நாடோடி கனவு – அறிமுக இயக்குனர் வீரசெல்வா இயக்கியுள்ள இந்த பத்தில் மகேந்திரன், சுப்ரஜா இணைந்து நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் காதல், ஜாதி பிரச்சனை என உருவாகியுள்ள குடும்ப செண்டிமெண்ட் படமாம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சிவகங்கை பகுதிகளில் நடந்துள்ளது. இந்த படத்திற்கு சபேஷ் முரளி இசை அமைத்துள்ளனர். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

8. போயா… வேலைய பாத்துகிட்டு – விருதை வேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் கதாநாயகன் கதாநயகியாக நடித்துள்ளனர். ‘ஹரிஸ்ரீதா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் மாரிஷ், சுப்பிரமணி, சஞ்சீவ் கண்ணா, தொல்காப்பியன் முதலானோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமாம் இது.

9. அரளி – ஏ,ஆர்,சுப்பராஜ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானவர்களும் புதுமுகங்களே! நம் கலாசாரத்துடன் ஒத்துப் போகாத ஒரு விஷயம் தான் இப்படத்தின் மைய கரு என்றாலும் எல்லா இடத்திலும் நடக்கும் விஷயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சுப்பராஜ் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்தை சில திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டு காண்பிக்க, அவர்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. உப்பு புளி காரம் – குருராஜா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர்கள் டினி ஜான், பாபு ராஜ், பக்ரு, தர்மஜன், பொன்னம்மா பாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். காமெடியை மைய கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரவி தேவேந்திரன் இசை அமைத்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட 10 திரைப்படங்கள் இந்த வாரம் நாளை ஆகஸ்ட்-3 ரிலீசாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *