2.O படத்தின் சிறப்பு காட்சி ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒளிபரப்பு
ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரஜினி நடித்த 2.O திரைப்படம் சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. சென்னையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற இல்லங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 900 மாணவ மாணவிகளுக்கு இந்த படம் காண்பிக்கப்பட்டது. ஏழை குழந்தைகளை திரை அரங்கிற்கு அழைத்து வந்து படம் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் பஸ்களில் அழைத்து வரப்பட்ட அவர்கள் குதூகலமாக அனைவரும் ஒன்றாக வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். இது தங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாகவும், மறக்க முடியாத தருணம் என்றும் தெரிவித்தனர். விசேஷ நாட்களில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று உணவு, இனிப்பு, ஆடை உள்ளிட்டவற்றை நாம் கொடுத்தாலும் அவர்களின் உள்ளத்தில் இருக்கும் ஆசைகளில் ஒன்றான தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்பதை நிறைவேற்றி தரும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது போன்று இன்னும் பல அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.