ஆண்ட்ராய்டு ஆபத்து… 2.0 திரை விமர்சனம்

நடிகர்கள்:  ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர்.
இயக்கம் – ஷங்கர்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா
கலை – டி.முத்துராஜ்
ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி

தயாரிப்பாளர் – சுபாஷ்கரன் லைகா நிறுவனம்

கதை என்ன?

ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படத்தை கொடுத்துள்ள இந்த படக்குழுவினருக்கு முதலில் நம் பாராட்டை தெரிவித்து விமர்சனத்தை தொடங்குவோம்.

எந்திரன் படத்தில் முதல் பாகத்தில் சிட்டி ரோபோவுக்கு மனித உணர்ச்சிகளை விஞ்ஞானி வசீகரன் கொடுத்துவிட்டதால் அந்த ரோபோ கோர்ட் உத்தரவுப்படி அருங்காட்சியத்தில் மட்டுமே இருக்கிறது.

எனவே இதில் ஒரு அழகான பெண் ரோபோவை நிபந்தனை கட்டுபாடுகளுடன் உருவாக்கியுள்ளார் வசீகரன். அந்த ரோபோதான் நிலா என்ற ஏமி ஜாக்சன்.

ஒரு கட்டத்தில் மக்களிடத்தில் உள்ள செல்போன்கள் மாயமாகிறது. அது மேலே பறந்து செல்கிறது. ஆனால் அதை பூமியில் இருந்து நீண்ட தொலைவுக்கு செல்லாமல் எங்கோ செல்கிறது.

அப்படியென்றால் அவை எங்கே செல்கிறது என்பதை புரியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.

இதனிடையில் செல்போன் உற்பத்தியாளர், சிம் நெட்வொர்க் உரிமையாளர், தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களை அந்த மாயமான செல்போன்கள் கொல்கிறது.

இதன் காரணம் புரியாமல் காவல் துறை தவிக்க, வேறு வழியில்லாமல் சிட்டி ரோபோவை மீண்டும் கொண்டு வர சொல்லி வசீகரனிடம் கேட்கிறார் மத்திய அமைச்சர்.

அப்போதுதான் மாயமான செல்போன்கள் எல்லாம் ஒரு ராட்டச பறவை (பட்ஷி) ஆக உருவெடுத்துள்ளது என்பது தெரிய வருகிறது.

அதுதான் மக்களை செல்போன்கள் பயன்படுத்த விடாமல் தடை செய்கிறது என புரிகிறது. அப்படியென்றால் அதன் நோக்கம் என்ன?ஏன் மனிதர்களை கொல்கிறது? என்பதுதான் கதை.

அந்த பக்ஷியை சிட்டி ரோபோ என்ன செய்தது.? ரெட் சிப் பொருத்தப்பட்ட 2.0 வெர்சன் ரோபோ மீண்டும் வந்ததா? மக்கள் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் அதிரடியான க்ளைமாக்ஸ்.

படத்தில் நடித்துள்ளவர்கள் எப்படி?

ரஜினி ரஜினி ரஜினி… படம் முழுக்க தன் ராஜாங்கத்தை அரங்கேற்றியுள்ளார் ரஜினிகாந்த். வசீகரன் கேரக்டரில் சாந்தம். சிட்டி கேரக்டரில் சீற்றம், 2.0 கேரக்டரில் அதிரடி என ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

படம் முழுக்க ஷங்கரின் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருந்தாலும் ஆங்காங்கே தன் ரசிகர்களுக்காக விருந்தும் வைத்துள்ளார். அதிலும் எதிர்பாராத 4வது மைக்ரோ ரோபோ வரும் போது நிச்சயம் குழந்தைகள் கைத்தட்டி வரவேற்பார்கள்.

அக்சய்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் அவர் செய்துள்ள வேலைக்கு அது போதுமானதாக இருக்காது. தாத்தா கேரக்டரில் நடித்துள்ளது அவர்தானா? எனத் தெரியாத அளவுக்கு தத்ரூபமான மேக்அப் போட்டுள்ளார் ஷங்கர்.

இவர் ராட்சச பறவையாக மிரட்டும் ஒவ்வொரு காட்சியும் அசத்தல். அதை எப்படிதான் ஷங்கர் படமாக்கினாரோ? என்பது பலருக்கும் ஆச்சரியத்தை எழுப்பும்.

படம் முழுக்க வரும் ரோபோவாக எமி ஜாக்சன். இவரே சின்ன சின்ன காமெடிகளையும் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் அதை படமாக்கிய விதம் அருமை. இந்திரலோகத்து சுந்தரி பாடல் படம் முடிந்து இறுதியா வருகிறது. அதிலும் தன் ட்ரேட் மார்க் பிரம்மாண்டத்தை ஹைடெக்காக காட்டியுள்ளார் ஷங்கர்.

ஏஆர். ரஹ்மான் இசையில் பின்னணி இசை பெரிதாக பேசப்படும். அதுபோல் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியின் பணி படத்திற்கு பெரிய பலம்.

ஆர்ட் டைரக்டர் கலைராஜின் செட் ஒர்க்ஸ் சூப்பர்.

முதல் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கொடுத்துள்ளார் ஷங்கர். 2ஆம் பாதியில் ப்ளாஷ்பேக் கொடுத்து பின்னர் 45 நிமிடங்களுக்கு சளைக்காமல் க்ளைமாக்ஸ் விருந்து வைத்துள்ளார்.

நம்மை அறியாமல் நாமே பறவை இனத்தை எப்படி எல்லாம் அழிக்கிறோம் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

செல்போன் சிக்னல் சரியாக இல்லை என்று நாம் அடிக்கடி கூறிக் கொண்டே இருப்போம். அதை சரி செய்ய ஓவர் ரேடியேசன் ஆப்ரேட்டர்கள் வைத்து செயல்படுவதால் நாட்டில் எத்தனை பறவை இனங்கள் அழிந்து வருகிறது என்பதை புரியும்படி காட்சிகளாக அமைத்துள்ளார்.

பூமியில் புவி ஈர்ப்பு உள்ளிட்ட 4 விசைகள் இருந்தாலும், ஐந்தாவது விசை ஒரு நெகட்டிவ்வான விசையாக உருவெடுத்து வந்தால் மனித இனத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியும் என்பதை கன்னத்தில் அறைந்து சொல்லியிருக்கிறார்.

செல்போன் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களுக்கு டிராய் அமைப்பு இன்னும் கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்ற சோஷியல் மெசேஜ்ஜையும் சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

கிராபிக்ஸில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பிரம்மாண்டத்தை கொடுத்து ரசிகர்களுக்கு மற்றொரு தீபாவளி கொடுத்துள்ளார் ஷங்கர்.

3.0 வெர்சன் மைக்ரோ ரோபோவையும் காட்டி நமக்கு எக்ஸ்ட்ரா ட்ரீட் கொடுத்துள்ளார்.

2.0… ஆண்ட்ராய்டு ஆபத்து

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *