96 திரை விமர்சனம்

நடிகர்கள்:  விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஆதித்யன், ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்.

இசை  – கோவிந்த் வஸந்தா

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு & சண்முக சுந்தரம்,

மக்கள் தொடர்பாளர் – மௌனம் ரவி

தயாரிப்பு – எஸ். நந்தகோபால்

கதை என்ன?

போட்டோ எடுப்பதையே தொழிலாக கொண்டவர் விஜய்சேதுபதி. ஒருமுறை தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு தன் மாணவி வர்ஷா உடன் செல்கிறார்.

அங்கு சென்றவுடன் அவருக்கு தன் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது.

எனவே பள்ளி நண்பர்களை சந்திக்க நினைத்து நண்பர்களுடன் பேசுகிறார்.

அதன்படி (22 வருடத்திற்கு பிறகு) ஒரு நாள் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுகிறார்கள்.

விஜய்சேதுபதியின் பள்ளி காதலி த்ரிஷாவும் அங்கு வருகிறார்.

அவர்கள் சந்திக்கும்போது அந்த 22 வருட காதலின் வலி எப்படி இருந்திருக்கும்? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் காவியமே இந்த 96.

நடிகர்கள் நடிப்பு எப்படி..?

ராமசந்திரனாக விஜய்சேதுபதி. சுருக்கமாக ராம். ஜானகி தேவியாக த்ரிஷா. சுருக்கமாக ஜானு. இருவரையும் சேர்த்தால் ஜானகி ராமசந்திரன். அந்த இரு பெயர்களும் இணைந்ததா? என்பதை எல்லாம் நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

எந்த கேரக்டர் என்றாலும் இவரை நம்பி கொடுக்கலாம் என்று எல்லாம் இயக்குனர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.

விக்ரம் வேதாவில் மிரட்டல் தாதா, தர்மதுரையில் டாக்டர், சேதுபதியில் போலீஸ் என பன்முகம் காட்டிய விஜய்சேதுபதி இதில் காதல் மன்னனாக வாழ்ந்திருக்கிறார்.

பெண்கள் வெட்கப்பட்டால் மட்டுமே பார்க்கும் ஆண்கள் இனி விஜய்சேதுபதி வெட்கப்பட்டாலும் பார்ப்பார்கள். அப்படியொரு அப்பாவியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

தன் காதலி ஜானுவை சந்திக்க போகிறோம் என்ற ஆவலுடன் இவர் செய்யும் சேட்டைகள் நம்மை சீட் நுனிக்கே கொண்டு வந்துவிடும்.

வெயிட்டான உடம்பை வைத்துக் கொண்டு அந்த ராம் கேரக்டருக்கு செம வெயிட்டு ஏற்படுத்தியுள்ளார் விஜய்சேதுபதி.

ஜானு கேரக்டரில் த்ரிஷா. இதுவரை கொடுக்காத நடிப்பை இதில் அள்ளி கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியை அதே பாசத்துடன் நேசத்துடன் இவர் அதட்டும் ஒவ்வொரு காட்சியும் நட்புக்கும் காதலுக்கும் எடுத்துக்காட்டு.

ரொம்ப நல்லவரு ராம். அவரை நல்லா பார்த்துக்கனும் என வர்ஷா த்ரிஷாவிடம் சொல்லும்போது.. எப்படி பாத்துக்கிறது? என த்ரிஷா துடிக்கும் காட்சி ஓவியம்.

விஜய்சேதுபதி அடிக்கடி கேட்கும் யமுனை நதிக்கரை பாட்டை பள்ளியில் பாடாமல் விட்டுவிட்டு முக்கியமான நேரத்தில் பாடுவது டைரக்டர் டச்.

பாத்ரூமில் த்ரிஷா அழும் அந்த காட்சி ரசிகர்களை மனதை நிச்சயம் கலங்கடிக்கும். தன் ராமை +2 மாணவனாக இவர் பார்க்க ஆசைப்படுவது பெண்களுக்கே உரித்தான ரசனை.

இளவயது ராமாக ஆதித்யன் (நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன்). இளவயது ஜானுவாக கௌரி என்ற பெண் நடித்திருக்கிறார்கள். நாங்களும் குட்டி விஜய்சேதுபதி த்ரிஷா தான் என அவர்களுக்கு ஈடாக நடித்திருக்கிறார்கள்.

பள்ளி காதல் என்றால் அழகுதான். அதிலும் இவர்களின் நடிப்பு இன்னும் கூடுதல் அழகு. இனி இந்த இருவரையும் நிறைய படங்களில் பார்க்க வாய்ப்புள்ளது.

தேவதர்ஷினி மற்றும் பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடிப்பும் செம. என்னடா? இவங்க இன்னும் காதலை விடலயா? என அவர்கள் கேட்கும்போது ரசிக்க வைக்கிறார்கள். ஜனகராஜ் சில காட்சிகளே என்றாலும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி..?

உமாதேவி மற்றும் கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் படத்திற்கு கூடுதல் பலம். அது கோவிந்த வஸந்தாவின் இசையுடன் இணையும் போது இன்னும் ரசிக்க வைக்கிறது.

காதலே காதலே பாடல் முதல் அனைத்து பாடல்களும் படத்துடன் பயணிப்பது இயக்குனரின் நல்ல ரசனை.

ஆனால் பாடலை விட நாம் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பை மட்டுமே கவனிக்கிறோம்.

இரு ஒளிப்பதிவாளர்கள்… மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முக சுந்தரம். இருவரும் தங்களின் பங்களிப்பை குறையே இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள். பள்ளி காட்சிகள் முதல் ரீயுனியன் காட்சி வரை பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவாளராக ஜொலித்த பிரேம் குமாருக்கு இதுதான் இயக்கத்தில் முதல் படமாம். முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

உண்மையான காதலையும் காதலர்களையும் ரசித்து ரசித்து காதலை வடித்திருக்கிறார். காமம் இல்லாத கண்ணியமான காதல் காவியத்தை படைத்துள்ளார்.

96 படத்தில் 100 (சதம்) அடித்துவிட்டார் டைரக்டர் பிரேம் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *