ஆண் தேவதை திரை விமர்சனம்

கதை எப்படி..?

மிடில் கிளாஸ் தம்பதிகள் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. மகன் கவின். மகள் மோனிகா.

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து வசதியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.

ஆனால் பிள்ளைகளை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதாலும் வேலைக்காக தங்கள் வாழ்க்கை ஓட்ட வேண்டியுள்ளதாலும் வேலையை விட சொல்கிறார் சமுத்திரக்கனி.

ஆனால் ரம்யா மறுக்கவே, இவர் வேலையை விட்டு ஹவுஸ் ஹஸ்பெண்டாக மாறுகிறார்.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ரம்யா, அதிரடியாக லோன் மேல் லோன் போட்டு நல்ல அப்பார்ட்மெண்டை வாங்கிவிடுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ரம்யாவின் மாற்றத்தை கண்டிக்கிறார் சமுத்திரக்கனி. இதனால் வாக்குவாதம் ஏற்பட தன் மகளை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி.

வேலை, பணம், வீடு என தேடி அலைகிறார். மற்றொரு பக்கம் உயர் அதிகாரி ஆசைக்கு இணங்க மறுத்த காரணத்தால் ரம்யாவுக்கு வேலை பறி போகிறது.

இதனால் லோன் கட்ட முடியாமல் போக, பேங்க ஆட்கள் வந்து கடுமையாக மிரட்டி கெடு வைத்து செல்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது? சமுத்திரக்கனி வீட்டுக்கு வந்தாரா? ரம்யா என்ன செய்தார்? லோன் என்ன ஆனது? குழந்தைகள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.

நடிச்சவங்க எப்படி..?

வழக்கமான அட்வைஸ் செய்யும் கேரக்டரில் சமுத்திரக்கனி. நடிப்பில் முதிர்ச்சி இருந்தாலும் குழந்தைகளுடன் கொஞ்சும்போதும் சீரியஸ் ஆகவே இருக்கிறார்.

ஜோக்கரில் ஜொலித்த ரம்யா பாண்டியன் இதிலும் கவர்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவதிப்படும் யுவதியாக நம்மை ஈர்க்கிறார்.

சுஜா வருணியின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது. அவரின் முடிவு லோன் வாங்கும் பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ப்ளஸ் என்ன.?

ஜிப்ரான் இசையில் பாடல்கள் அருமை. நிகரா பாடல் மனதில் நிற்கும். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் படத்திற்கு பெரிய பலம்.

மைனஸ் என்ன.?

சீரியல் போல் சில காட்சிகள் உள்ளது. இது சோர்வை தருகிறது. எடிட்டர் காசி விஸ்வநாதன் கத்திரி போட்டு இருக்கலாம்.

ராதாரவி, இளவரசு போன்ற திறமையான நடிகர்கள் இருந்தும் பலனில்லை. அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் இருந்தும் காமெடியில்லை.

ரெட்டச்சுழி படத்தை எடுத்த தாமிரதான் இப்படத்தை இயக்கி இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

நம் தினமும் கடந்து செல்லும் வாழ்க்கை முறையை ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அதை நீளமாக கொடுத்துவிட்டதுதான் வருத்தம்.

ஆண் தேவதை.. பெண்களுக்கு பிடித்த தேவதை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *