தலைவர் ரஜினியின் தரிசனம்

நேற்று முன்தினம் குன்றத்தூரில் நடந்த துயர சம்பவம், நம் தலைவரின் தீவிர ரசிகர் விஜய் அவர்கள்  வீட்டில் தான் நடந்தது என்று நான் தெரிந்து கொண்ட போது இரவு மணி 9:30.  அவரிடம் பேசிவிட்டு கவலையில் அமர்ந்து இருந்த எனக்கு, அவரை சிறிது அளவேனும் சமாதானப்  படுத்த முடியும் என்றால் நம் தலைவரால் தான் முடியும் என்று தோன்றியது. உடனே மடிக்கணினியை எடுத்து வைத்து நான் எழுதத்  தொடங்கினேன். என் எழுத்தின் வழி அந்த துயரம் செல்ல வேண்டும் என்று மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த கட்டுரையைத்  திரு.மாயவரத்தான் அவர்களிடம் பகிர்ந்தேன். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன்.

சமூக வலைத்தளங்களில் 100 க்கு 99% ரசிகர்கள், தலைவர் அவரை நிச்சயமாக சந்திப்பார் என்று பின்னூட்டம்  இட்டனர். சில பேர், இதில் தலைவரை இழுப்பது தேவை இல்லாத வேலை என்றும் கூறி இருந்தனர். இன்னும் சில பேர்  உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவரைப் பார்க்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பின்னூட்டம் இட்டு இருந்தார்கள்.” இன்னுமாடா!!! இந்த ஊர் நம்மள நம்முது ” என்கின்ற வடிவேலு காமெடியை  நினைத்துக்  கொண்டு நான் அமைதியாக பதில் அளிக்காமல் இருந்து விட்டேன். நான் உண்மையில் தலைவரை இதுவரை தூரத்தில் இருந்து கூட சந்தித்தது கிடையாது. காவிரியை எதிர்பார்த்து காத்து இருக்கும் தமிழகம் போல, அவரைக்  காண மிக ஆவலாக நேற்று வரை காத்து இருந்தேன்.

நேற்று காலை எழுந்தவுடன் நண்பர் விஜயை தொடர்பு கொண்டு தலைமையிடம் இருந்து  ஏதாவது அழைப்பு வந்ததா என்று கேட்டேன். தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் தன்னை தொடரபு கொண்டதாகவும். இன்று மாலை 3.30 மணிக்கு தலைவரை சந்திக்க வருமாறு கூறியதாவும் கூறினார். தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றி என்றும் கூறினார். இனிமேல் ரஜினி ரசிகர்கள் தான் எனது உறவினர்கள் என்றும் கூறினார். ( அப்பொழுது இன்னொரு துயரமான நிகழ்வையும் தெரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து தாய் , தந்தை இல்லாமல் வளர்ந்தவர் தான் நண்பர் விஜய் ).  நானும் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.

நேற்று மதியம் மணி 12. திரு.மாயவரத்தான்  அவர்கள் மீண்டும் என்னை அழைத்தார். விஜய் அவர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதால், யாராவது அவரை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தலைமை நினைக்கிறது. அந்த கட்டுரையை எழுதியே நீங்களே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினார். எந்த அளவிற்கு திட்டமும், யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணமும் கொண்டு மன்றம் இயங்குகிறது என்று  பாருங்கள் !!! இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. “உங்களால் வர முடியுமா?? என்று? ஒரு வார்த்தை கேட்டு விட்டார். 25 ஆண்டு கால தவம். இப்படி ஒரு நாள் வராதா?? என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான  கோடி ரசிகனில்  நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும்?? அலுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி  பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை  சொல்லிவிட்டு வரத்  தெரியாதா ?? உடனடியாக அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, என் மனைவியிடம் இந்த விஷயத்தை கூறினேன்.

எங்களுக்கு பிள்ளை பிறந்த போது , அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் இருவரும் உணர்ந்தோம். குளித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு நண்பர் விஜய்யை கூட்டிச்செல்ல அவர் அலுவலகம் சென்றேன். (ஆம். நண்பர் விஜய் அந்த துயரத்தை மறக்க அலுவலகம் வந்து விட்டார்.) திருவேற்காட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் 14 கிலோமீட்டர். அந்த வழியில் தான் அவர் அலுவலகமும் உள்ளது. அப்பொழுது கடுமையான போக்குவரத்து நெரிசல். எனது கோவம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மீது சென்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் குலத்தொழிலை மனதிற்குள் மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பழைய நினைவுகள் வந்து சென்றன. நான் முதலில் பார்த்த ரஜினி படம், ரஜினி போல் வேஷம்யிட்டு மாறுவேடப் போட்டியில் நான் வென்ற பரிசுகள், ரஜினிக்காக எழுதிய கட்டுரைகள் என பலவும் என் மனதிற்குள் வந்து சென்றன. திடீரென்று எனக்கு அன்று ஆசிரியர்கள் தினம் என்பது ஞாபகத்திற்கு வந்தது.

சரியான நாளில்தான் தலைவரை சந்திக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உருவம் வெற்றிக்கு தடையல்ல, மொழி வெற்றிக்கு தடையல்ல, ஊர் வெற்றிக்கு தடையல்ல என்று பல படிப்பினைகள் நமக்கு தலைவர் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்த நாளில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டேன். அதற்குள் விஜய்யின் அலுவலகம் வந்தது. மற்றொரு கடினமான நேரம். இதுவரை நான் அவரைப் பார்த்தது இல்லை. தொலைபேசியில் பேசி இருக்கிறேன் அவ்வளவுதான். வண்டியில் ஏறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி. அந்த கொடுமையான சம்பவங்களை நினைவு படுத்தும் கேள்வியை தவிர்த்தேன். தலைவருக்கு ஏதாவது நான் பரிசு பொருள் வாங்கி வருகிறேன் என்று கூறி, ஒரு புத்தர் சிலையை வாங்கினேன் . ” நீங்கள் முதல்வராக என் வாழ்த்துக்கள்” என்று எழுதி கிப்ட் பேக் செய்தேன்.

ராகவேந்திரா மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு தூத்துக்குடி மக்கள் மன்றத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருந்தார். அன்று காலைதான் அவர் எப்படி உழைத்து முன்னுக்கு வந்தார் என்பது குறித்து படித்து இருந்ததால். அவர் மீது தானாக ஒரு மரியாதை வந்தது. உட்காருங்கள் என்றனர். எங்களுடன் மதுரை, நாகர்கோயிலில் இருந்தும் பலர் வந்தும் இருந்தனர். அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. அப்பொழுது காலா பட இசைவெளியிட்டின் போது கால்களை இழந்த ரசிகர் அவர்களின் 5 வயது மகன் அங்கு இருந்தான். நம் விஜய், அவனை கூப்பிட்டு உன் பெயர் என்னவென்று கேட்டார். அவன் அஜய் என்று கூறினான். விதி எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள். விஜய் அவர்களின் இறந்த மகன் பெயரும் அஜய் தான். மறுபடியும் மீளா துயரத்திற்கு சென்றார். இந்த மாதிரி என் பையனை நான் கூட்டிட்டு வந்து போட்டோ எடுக்கணும்னு பார்த்தேன், ஆனா அவன் மூலமாக தான்  நான் தலைவரைப்  பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று கூறினார். அப்பொழுது தான் நான் நிகழ் உலகிற்கு வந்தேன். நாம் தலைவரைப் பார்க்கப்போவது ஒரு துயர சம்பவத்திற்கு என்ற எண்ணமே எனக்கு அப்பொழுது தான் வந்தது.

மறுபடியும் ஸ்டாலின் அவர்கள், தலைவர் அவர்கள் அனைவரையும் இல்லத்தில் சந்திக்க விரும்புகிறார். அங்கே வாருங்கள் என்று கூறினார். காரில் ஏறி போயஸ்  கார்டன் நோக்கி சென்றோம். எங்களுடன் கன்னியாகுமாரி மாவட்ட பொறுப்பாளர் திரு ஆல்வின் அவர்களும் வந்தார். 15 நொடிகளில் தலைவரின் இல்லத்தை அடைந்தோம். ஆனால்  15 நாட்கள் பயணம் செய்வதைப் போல் உணர்ந்தேன். காரை நிறுத்தும் முன் அந்த இடத்தை பார்த்தேன். இங்கு தானே, தலைவரின் காரை நிறுத்தி, அவரை செல்ல விடாமல் செய்து, அவரின் அரசியல் நுழைவிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் என்று நினைத்துக்  கொண்டேன். அனைவரும் உள்ளே சென்று அமரவைக்கப்பட்டோம். எத்தனையோ முறை நான் தலைவரை பார்க்க வேண்டும் என்று பலரிடம் கெஞ்சி கேட்டபோதும் கிடைக்காத வாய்ப்பு, இன்று வேறொருவருக்கு உதவப்போக எனக்கு கிடைத்து இருப்பதை நினைத்தேன். இதுதான் ஆன்மீக அரசியல் என்று புரிந்து கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *