மர்மக் கதை மகாராணி அகதா கிறிஸ்டியின் பிறந்த நாள் இன்று -செப் -15

மர்மக் கதை மகாராண அகதா கிறிஸ்டியின் பிறந்த நாள் இன்று -செப் -15

ஐரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது.

இப்படிப் பனிப்பொழிவு ஏற்பட்ட வாரக் கணககில் ரயில்கள் சிக்கிக் கொள்வது உண்டு என்பதால் யாரும் பதற்றமடையவில்லை.

ஆனால் அவர்களைப் பதற்றமடையச் செய்யும் ஒரு விஷயம் நடந்தேறுகிறது.

குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது.

ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார்.

வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.

அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது.

போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!

-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் “MURDER ON THE ORIENT EXPRESS” நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி. படிக்கும் ஆர்வத்தை ஏகமாக இது கிளறிவிட தொடர்ந்து படித்தேன்.

வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார்.

அந்த விசாரணையில்தான் எவ்வளவு திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன!

கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன.

பிரயாணிகளில் ஒருவர் நியூயார்க் டிடெக்டிவ் ஏஜென்ஸியைச் சேர்ந்த துப்பறியும் நிபுணர் ஹார்ட்மேன் என்பதையும் பொய்ரெட் கண்டுபிடிக்கிறார். அவரது சாட்சியமும் கேசுக்குத் துணை நிற்கிறது.

முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி நாவலை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!

நாவலின் ரத்தினச் சுருக்கம் தான் மேலே நான் தந்திருப்பது.

அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வோம்.

லக்கி சான்ஸில் ஒன்றிரண்டு கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் நாம் படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு நம் காதுகளில் ஒலிக்கும்.

இந்த நாவலிலும் அப்படியே.

அகதா கிறிஸ்டி கண்ணி‌ வெடிகளைப் போல தன் நாவலினூடே குற்றவாளி யாராக இருககும் என்பதற்கான க்ளூக்களையும் அங்கங்கே தெளித்திருப்பார்.

அதைப் பற்றிக் கொண்டு கண்டுபிடிப்பதுதான் கஷ்டமான விஷயம். மூளைக்கு வேலைதரும், சுறுசுறுப்பூட்டும் விஷயமும் கூட!

நாவலின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, அந்தக் கண்ணிவெடிகளை நாம் அறியும்போது, ‘அட!’ என்கிற பிரமிப்பு நிச்சயம் ஏற்படும்.

அந்த பிரமிப்பை நமக்குள் இந்த நாவலும் தரத் தவறவில்லை. அகதாவின் நாவல்கள் வரிசையில் இதற்கு இரண்டாம் இடம் தரலாம். முதல் இடம் ‘AND THEN THERE WERE NONE’ என்ற கதைக்கு.

இதை படமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு : ‘‘நாவல்கள் படிப்பதற்கெல்லாம் பொறுமை இல்லைப்பா’’ என்பவர் களுக்கு… இந்த ‘MURDER ON THE ORIENT EXPRESS’ கதை இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

(1974 வெர்ஷன் மிக நன்றாக இருக்கும்) ‘AND THEN THERE WERE NONE’ படமும் திரைப்படமாகி உள்ளது.

கூகிளாண்டவரிடம் தேடினீர்கள் என்றால் இரண்டு படங்களையும் டவுன்லோடு செய்து பார்த்து ரசிக்க முடியும்.

வாசிப்பு அனுபவம் விரும்புபவர்களுக்கு : ‘‘ஆங்கிலத்தில் நாவல்கள் படிப்பது என்னால் முடியாதுப்பா, அவ்வளவு பொறுமை கிடையாதுப்பா’’ என்பவர்களுக்கு…

இவ்விரண்டு நாவல்களையும் கண்ணதாசன் பதிப்பகம் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’ என்றும் ‘பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை’ என்றும் தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *