முக்கிய செய்திகள்

குஜராத்தில் ரூ.650 கோடி மின் கட்டணம் தள்ளுபடி….

புதுடில்லி : ‘விவசாயிகள் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’ என, காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி வரும் நிலையில், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்தில், கிராம பகுதிகளில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான, மின் கட்டண பில்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தெரசா மே பதவிக்கு ஆபத்து; மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்…

லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெரிமி கார்பி கூறுகையில்,”பிரதமர் தெரசா மே நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே அவர் பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். இதனால் தான் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இங்கிலாந்தின் அனைத்து எம்.பி.க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானம் எப்போது ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் சொந்த கட்சி எம்.பி.க்களிலேயே பலர் தெரசா மேக்கு எதிராக இருப்பதால் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இன்று விண்ணில் பாய்கிறது ‘ஜி சாட் – 7ஏ சேட்டிலைட்’….

சென்னை: அதி வேக தகவல் தொடர்பு சேவைக்காக, ‘ஜி சாட் – 7 ஏ’ என்ற செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் வாயிலாக, செயற்கைகோள்களை, இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 11’ என்ற ராக்கெட் உதவியுடன், ‘ஜி சாட் – 7 ஏ’ என்ற செயற்கைகோள், இன்று மாலை, 4:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.இதற்கான, ‘கவுன்ட் டவுண்’ நேற்று பகல் 2:10 மணிக்கு துவங்கியது.

நாட்டின், அனைத்து பகுதிகளுக்கும், அதிவேகமாக, தகவல் தொடர்பு சேவை கிடைப்பதற்காக அனுப்பப்படும், ‘ஜி சாட் – 7 ஏ’ செயற்கைகோள், 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுள் காலம், எட்டு ஆண்டுகள். பாதுகாப்பு துறையின், தகவல் தொடர்பு சேவைகளுக்காக, இந்த செயற்கைகோள் முக்கிய பங்காற்றும்.

ரூபாய் நோட்டு அச்சடிக்க செலவு….

புதுடில்லி : ”கடந்த, 2016 – 17ல், ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு, 7,965 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. மேலும், 2017 – 18ல், 4,912 கோடி ரூபாய் செலவிடப்பபட்டு உள்ளது,” என, ராஜ்யசபாவில், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, தெரிவித்தார்.

ஒரு லட்சம் நிறுவனங்கள் நீக்கம்….

புதுடில்லி : ”நடப்பு நிதியாண்டில், நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த, ஒரு லட்சம் நிறுவனங்களின் பெயர்கள், நிறுவனங்களின் பதிவு விபரங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன,” என, ராஜ்யசபாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி, தெரிவித்தார்.

லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு….

இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மீது 1.145 பில்லியன் பவுண்ட் திவால் வழக்கு போடப்பட்டுள்ளது

21-ந் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் – 24-ந் தேதி தவிர 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….

ஐதராபாத்: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike

ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கென தனிக் கட்சி துவக்கம்….

புதுடில்லி: பெண்கள் மட்டுமே உள்ள, பெண்களின் நலனுக்காக குரல் கொடுக்க, தேசிய பெண்கள் கட்சி என்ற பெயரில், மருத்துவரும், சமூக ஆர்வலருமான, ஸ்வேதா ஷெட்டி, புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தங்கள் உரிமைக்காக போராடும் நிலையிலேயே பெண்கள் உள்ளனர். வீடுகள், அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன.ஆனால், பெண்களின் நலனுக்காக யாரும் போராடுவதில்லை. அரசியல் கட்சிகளில், பெண்கள் இருந்தாலும், அங்கு ஆணாதிக்கமே மேலோங்கி உள்ளது. இதனால், பெண்களின் நலனுக்காகவும், உரிமைகளைப் பெறுவதற்காகவும், தேசிய அளவில், தனியாக கட்சி துவக்கியுள்ளேன்.

இந்தக் கட்சியில், பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். சட்டசபை, பார்லி.,யில், பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, தீவிர முயற்சி எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *