‘சி.எஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட சி.சுப்பிரமணியம் (C.Subramaniam) நினைவு நாளின்று

பொள்ளாச்சி அருகே செங் குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்து. பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி, சென்னை மாகாணக் கல்லூரியில் இளநிலை அறிவியல், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர்.

1936-ல் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி நேர்மையான அரசியல் செயல்பாடுகள், செயல்திறனால் படிப்படியாக உயர்ந்தார். நாடு விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார். ராஜாஜி இவரது அரசியல் குரு.

1952 முதல் 1962 வரை மாநில அரசில் கல்வி, சட்டம், நிதி அமைச்சராகப் பணியாற்றினார். தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான ஆட்சியில் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றி பல முக்கிய திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்தார். தமிழ கத்தில் கல்வித் துறை வளர்ச்சிக்கு மகத்தான தொண் டாற்றியுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் நதிகளின் நீரை தமிழகத்துக்குத் திருப்பிவிடும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் இவரது முயற்சியால் கேரளம் – தமிழகம் இடையே சுமுகமாக நிறைவேறியது.

1962 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மத்திய எஃகு, சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1965-ல் உணவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார். 1972-ல் கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார். ‘உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியது சி.எஸ்-ன் தொலைநோக்கும் முனைப்புகளும்தான்’ என்று அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வேளாண் அறிவி யலாளர் டாக்டர் நார்மன் குறிப்பிட்டுள்ளார்.

1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தி பக்கம் நின்று, கட்சித் தலைவரானார். நெருக்கடி நிலையின்போது நிதி அமைச்சராகப் பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராக, இந்திய திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1990-ல் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவியேற்றார்.1993-க்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கி பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னை தேசிய வேளாண் அறக்கட்டளை, திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவற்றை நிறுவினார். ஊழலை அறவே வெறுத்தவர். நாட்டுக்கு இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. 1998-ல் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *