செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்
நடிகர்கள்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா,தியாகராஜன், மன்சூர் அலிகான்,மற்றும் பலர்.
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ்சிவன்
தயாரிப்பு – மெட்ராஜ் டாக்கீஸ் மணிரத்னம், லைகா சுபாஸ்கரன்
மக்கள் தொடர்பாளர் – நிகில் முருகன்
என்ன கதை..?
பிரகாஷ் ராஜ் – ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கிறார்கள்.
அரசியல் பலம், பணபலம் உள்ள பிரகாஷ்ராஜ் அரசியல் செல்வாக்கு உள்ளவர். எனவே இவருக்கு எதிரிகளும் அதிகம்.
ஒருநாள் அவர் தன் மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அவரை ஒரு கும்பல் கொல்ல வருகிறது.
அந்த விபத்திலிருந்து தப்பினாலும் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.
இவரது மகன்கள் அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூவரும் தந்தையை கொல்ல முயற்சித்தவர்களை தேடி அலைகிறார்கள்.
இத்துடன் அரவிந்த்சாமியின் நண்பர் போலீஸ் விஜய்சேதுபதியும் இவர்களுக்கு உதவுகிறார்.
ஆனால் தன் மகன்களில் ஒருவரே தன்னை கொல்ல சதி செய்தார் என்பதை அறிந்து மனைவியிடம் சொல்லிவிட்டு மரணம் அடைகிறார் பிரகாஷ்ராஜ்.
அதன்பின்னர் அவரது இடத்தை அடைய 3 மகன்களும் முயல்கிறார்கள்.
யார் அந்த இடத்தை அடைந்தார்கள்? தந்தையை கொல்ல முயற்சித்தவர் யார்? விஜய்சேதுபதி கண்டு பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள் எப்படி..?
நச்சுன்னு நாலு ஹீரோக்களை தேடி, அவர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் ஒரு கதையமைத்து அப்ளாஸ் வாங்கிவிட்டார் மணிரத்னம்.
அரவிந்த்சாமி முரட்டு ஆசாமியாக வந்தாலும் தந்தை கூடவே இருந்து அவருக்கு தேவையானவை அனைத்தும் செய்து கவர்கிறார்.
மனைவி ஜோதிகா இருந்தும் கள்ளக்காதலி அதிதி ராவிடம் சின்ன சின்ன ரொமான்ஸ் செய்கிறார் அரவிந்த்சாமி.
அப்பா சீட்டுக்கு ஆசைப்பட்டு அதில் அமர்ந்து ஆனந்தம் கானும் காட்சியில் அருண்விஜய் அசத்தல்.
மிகையில்லாத நடிப்பில் சிம்பு. மணிரத்னம் பாணி இல்லாமலும் தன் பாணி இல்லாமலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் சிம்பு.
காதலியை கொன்றவனை இவர் பழிவாங்கும் காட்சி எதிர்பார்க்காத ஒன்று.
சஸ்பென்ட் ஆன போலீஸ் ஆபிசராக விஜய்சேதுபதி. இவருக்கு காமெடி இந்தளவுக்கு வருமா? என்பதே இந்தப் படத்தில்தான் தெரிகிறது.
வீடு அவ்வளவுதான் முடிஞ்சிட்டு என்று சொல்வது முதல், புது ட்ரெஸ் மேல கை வச்சிட்டான் அதான் அடிச்சிட்டேன் என்பது வரை மனிதர் படத்தை கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார். க்ளைமாக்ஸில் கில்லி அடித்திருக்கிறார்.
இவர்களுடன் அமைதியான மருமகளாக ஜோதிகா. ஐஸ் கட்டி அழகியாக அதிதிராவ். டயானா எரப்பா சில காட்சிகளே என்றாலும் ரசிக்கும் ரகம்.
அருண்விஜய்க்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் இலங்கை தமிழ் பேசி கவர்கிறார் ஐஸ்வர்யா.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, வில்லன் தியாகராஜன், மன்சுர் அலிகான் அனைவரின் பாத்திரப்படைப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?
மணிரத்னம் படத்திற்கு மட்டும் என்ன மேஜிக் செய்வாரோ எஆர். ரஹ்மான். பாடல்களும் சரி பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் மல்டி ஸ்டார்ர் படங்கள் அதிகம் வரும். தமிழ் சினிமாவில் பெரும்பாலும் 2 ஹீரோக்கள் படமே வரும்.
ஆனால் இதில் நாலு ஹீரோக்களை வைத்து ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் கொடுத்துள்ளார். இனி இது போன்ற படங்கள் நிறைய வரலாம்.
படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை டைரக்டர் அசர வைத்துள்ளார்.
மணிரத்னம் படங்கள் என்றால் இருட்டாகவே இருக்கும். ஆனால் இதில் தன்னுடைய ப்ரைட் படத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். ஹாட்ஸ் ஆஃப்.
செக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன