கிரசன்ட் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார், என்.ஏ.ஏ.சி. அமைப்பின் செயல் தலைவர் முனைவர் வீரேந்தர் சிங் சவுகான்!

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் (B.S. Abdur Rahman Crescent Institute of Science & Technology) 8-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (16 டிசம்பர் 2018) வண்டலூரில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. தேசிய கல்வி மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பான என்.ஏ.ஏ.சி. (National Assessment and Accreditation Council – NAAC) – யின் செயல் தலைவர் முனைவர் வீரேந்தர் சிங் சவுகான் (Dr. Virander Singh Chauhan) இவ்விழாவில் பங்கேற்று, பட்டமளிப்பு பேருரையாற்றி, தங்களது கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 1291 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 25 பேர் முனைவர் பட்டமும், 2 பேர் முதுநிலைப் பொறியியல் பட்டமும், 984 பேர் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டமும், 263 பேர் முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டமும், 17 பேர் முதுநிலை பட்டயச் சான்றிதழும் (PG Diploma) பெற்றனர்.

இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர், திரு. பி.எஸ்.ஏ. ஆரிஃப் புஹாரி ரஹ்மான் (BSA Arif Buhary Rahman); இணை வேந்தர் திரு. அப்துல் காதீர் ஏ ரஹ்மான் புஹாரி (Abdul Qadir A. Rahman Buhari); துணை வேந்தர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பேரா. ஐ.ஆர். முனைவர் சாஹூல் ஹமீத் பின் அபு பக்கர் (Tan Sri Dato’ Sri Prof. IR Dr. Sahol Hamid Bin Abu Bakar), மற்றும் பதிவாளர் முனைவர் ஏ. ஆசாத் (A. Azad) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன், திரளான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பொறியியல் துறையில் சிவில் (Civil), ஆட்டோமொபைல் (Automobile), மெக்கானிக்கல் (Mechanical), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science and Engineering), பாலிமர் (Polymer), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (ECE), பி.ஆர்க் (B.Arch) எனும் கட்டிட வடிவமைப்பியல் போன்றவற்றோடு, இஸ்லாமியக் கோட்பாட்டு ஆய்வியல் (Islamic Studies) என, பல துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றனர். இதில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் பிரிவு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மொத்தம் 32 பேர் தங்கப் பதக்கங்களையும் பெற்றனர்.

இந்தக் கல்லூரியில் கடந்த 2018-ஆம் ஆண்டும் கூட, பல துறை சார்ந்த நிறுவனங்களான, கேப்ஜெமினி (Capgemini), எல்&டி இன்ஃபோடெக் (L&T Infotech), டி.ஹெச்.எல். (DHL), ஐ.பி.எம். (IBM), ரெனால்ட் நிஸ்ஸான் (Renault Nissan), எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young), நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India), வேல்யூ லேப்ஸ் (Value Labs), சோனி (Sony), ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் (IDBI Federal), அடோப் சிஸ்டம்ஸ் (Adobe Systems), பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas) ஆகியவை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளின் சராசரியைப் பார்க்கும்போது, இங்கே பயின்ற 72 சதவீத மாணவர்களுக்கு வளாகத் தேர்விலேயே உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு, அதிகபட்சமாக 22 லட்சம் ரூபாய் வரை ஆண்டு சம்பளமாகப் பெற்றவர்களும் இதில் உண்டு.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினரும், என்.ஏ.ஏ.சி.-யின் செயல் தலைவருமான முனைவர் விரேந்தர் சிங் சவுகான் பேசுகையில், “1948-ஆம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்களும், 200 கல்லூரிகளும் இருந்த நிலை மாறி, தற்போது இந்தியாவில் 900 பல்கலைக்கழகங்களும், 40000 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 3.5 கோடி மாணவர்கள் உயர்கல்வியைப் பயின்று வருகின்றனர். ஆனால், இன்றளவும் தமது 20வயதுகளில் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து நிறைவு செய்பவர்களின் எண்ணிக்கை சராசரியாகப் பார்க்கையில் மிகக் குறைவாகவே உள்ளது. மாறாக, நீங்கள் எல்லாம் இந்தக் கல்லூரியில் உரிய நேரத்தில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள். எனவே, மற்றவர்களை விட இந்த சமூகத்துக்கு அதிகப்படியாகப் பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு அதிகமாகவே உள்ளது” என்றார்.

தொடர்ந்து மாணவர்களிடையே அவர் பேசுகையில், “நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட மனதளவில் முடிவு செய்துவிட்டால், பின்னர்…. அதில் ‘இயலாது’ என எதற்கும் இடமில்லை. எனவே, களமிறங்குங்கள். இந்த உலகை அரவணைத்து முன்னேறுங்கள். இப்பயணத்தின்போது, எது வேண்டும் என தேர்வு செய்வது, உங்கள் கையில்தான் உள்ளது. எனவே, பொறுமையுடன் கையாளுங்கள். இந்த நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்” என அறிவுறுத்தினார்.

பல்கலைக்கழக வேந்தர் திரு. பி.எஸ்.ஏ. ஆரீப் புஹாரி ரஹ்மான் பேசியபோது, “பல்வேறு துறைகளின் முன்னணி நிறுவனங்கள், எங்களது மாணவர்களுக்கு வேலை தர முன்வருகின்றன என்பதே, தொழில் துறைகளின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, தகுதியான மாணவர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்பதற்கு சான்று. நாங்கள் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு என இரண்டிலுமே, பல்வேறு புதிய பாடங்களைக் கற்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து கல்வி கற்க மாணவர்களை வரவேற்கிறோம். வெளிநாட்டு மாணவர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. காரணம், எதைச் சாதிக்க வேண்டும் என மாணவர்கள் நினைக்கிறார்களோ, அதற்கு முன்னேறிச் செல்ல எங்களது பாடத்திட்டங்கள் உதவுகின்றன. அதோடு, அவர்களது மற்ற இலக்குகள் நோக்கி பயணிக்கவும் இந்த பாடங்கள் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்” என்றும் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பேராசிரியருமான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ முனைவர் சாஹூல் ஹமீத் பின் அபு பக்கர் பேசுகையில், “இந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது…. போதிப்பது மட்டுமின்றி, ஆராய்ச்சிப் பணி மற்றும் விரிவாக்க நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கும் சம அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சி… அதையொட்டி ஏற்பட்டு வரும் உலகளாவிய மாற்றம் போன்றவற்றை எதிர்கொள்ள ஏதுவாக சிறப்புத் தகுதி உள்ள பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காக, 100 சதவீத அளவு முனைவர் பட்டம் பெற்றவர்களை இப்பணியில் நியமிக்கும் நோக்கம் விரைவில் எங்களது கல்லூரியில் நிறைவடையும் நிலையில் உள்ளது” என்றார்.

“மறுபுறம், நமது மாணவர்கள் இந்த சமூகத்தில் இருந்து பெற்றதை, பலமடங்காகப் பெருகச் செய்து, அதை மீண்டும் இந்த சமூகத்துக்கு… இந்த நாட்டுக்கு… இந்த உலகுக்கு திருப்பித் தர வேண்டும். உங்களை இந்த உலகம் நினைவில் கொள்ளும்படியாக சாதிக்க வேண்டும்” எனவும் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி பற்றி…

தரமான கல்விக்கும், தலைமைப் பண்புகளுக்கும் பெயர்பெற்ற பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி, சென்னைக்கு அருகே வண்டலூரில் அமைந்துள்ளது. 50 பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற முதுநிலை பட்டப்படிப்பு (PG NBA-accredited Programmes) என அனைத்தையும் சேர்த்து – 12 பல்வேறு தனித்தனி துறைகளாக (Unique Schools) இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, எல்லாத்துறைகளிலும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளும் இங்கே நடைபெற்று வருகின்றன.

இவ்விதம் கடந்த 34 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தக் கல்வி நிறுவனம் உயர்கல்வித் துறையில் சிறந்து விளங்குவதுடன், தேசிய அளவில் முதல் சுற்றிலேயே என்.ஏ.ஏ.சி.-யின் ‘ஏ’ எனக் குறிப்பிடப்படும் முதல்நிலை தரச் சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி நிறுவன தரவரிசைப்படுத்தல் கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) மேற்கொண்ட மதிப்பீட்டின்படி நாட்டில் உள்ள முன்னணி 100 தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கல்வித் தர மதிப்பீட்டுக்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் 4 க்யு.எஸ். (4QS) சான்றிதழ் பெற்ற 4-ஆவது நிறுவனம் கிரசன்ட்கல்விக் குழுமம் ஆகும். மறுபுறம் கற்பித்தல், வேலை வாய்ப்புகள், வசதிகள் மற்றும் முழுமையான அணுகுமுறை போன்ற 4 முக்கிய பண்புகளில் 5க்யு.எஸ். என்ற தரச் சான்றிதழ் பெறவும் கிரசன்ட் தேர்வு பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கடைபிடித்து வரும் தர மேலாண்மை கட்டமைப்பு – இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஐ.எஸ்.ஒ. (ISO) தரநிலைகளின்படி, நெதர்லாந்து நாட்டின் டெட் நார்ஸ்க் வெரிட்டஸ் (Det Norske Veritas)–ன் சான்றிதழ் பெற்றுள்ளது. அண்மைய நடப்பாக, இந்நிறுவன மாணவர்களின் வேலை வாய்ப்பு தகுதிநிலை மற்றும் ஆசிரியர்களின் தரநிலை போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொண்ட க்யு.எஸ்.–ன்படி ‘டைமண்ட்’ (Diamond) தரநிலை தகுதியைப் பெற்றுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *