இன்று 67 வது பிறந்த பிறந்த நாளை கொண்டாடும் தினமலர் நாளிதழ்

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) திருவனந்தபுரத்தில் தினமலர் நாளிதழ் துவங்கியதற்கு ஒரு கொள்கையும், லட்சியமும் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த, பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் நாஞ்சில் நாட்டை(இன்றைய குமரி மாவட்டம்) தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பதே அது. தமிழர்களின் உரிமையை பெறும் கருவியாக ஒரு நாளிதழ் தேவை என நினைத்தார். போராடும் தமிழர்களின் போர்வாளாய் நிற்க, மலையாள மண்ணில் தமிழ் நாளிதழை 1951ல் இதே நாளில் துவக்கினார். தமிழர்களின் உரிமைக்குரலாக தினமலர் ஒலித்தது; அதில் வெற்றியும் கண்டது. நாஞ்சில் நாடு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. லட்சியம் நிறைவேறிய திருப்தியில், தன் சேவை இனி தமிழ் மண்ணிற்கு தான் தேவை என்று நாளிதழை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றினார் (1957).

உரிமைக்கு குரல் கொடுத்தாயிற்று; இனி மக்கள் உயிர் வாழ செய்திகள் உதவ வேண்டும் என்று நினைத்தார். வெறுமனே தகவல்களை தருவது மட்டுமே செய்தி அல்ல. நகரங்களில் நடப்பது மட்டுமே செய்தி ஆகி விடாது. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டை முன்னேற்றும்; கிராமங் களில் செய்திகளை தேடுங்கள்’ என்று நிருபர்களுக்கு கட்டளையிட்டார்.குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை, பஸ் வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் என அடிப்படை கட்டமைப்புகள் கிராமங்களுக்கு தேவை என எழுதிக் கொண்டே இருந்தார்.அவரது செய்திகளில் தொலைநோக்கு பார்வை இருக்கும்; பிரச்னைக்கான தீர்வும் இருக்கும். உதாரணமாக, குடிநீர் பஞ்சத்தில் தவித்த கோவில்பட்டி, எட்டயபுரத்திற்கு 35 கி.மீ., துாரத்தில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவது தான் ஒரே வழி என எழுதினார். அரசும் ஏற்றுக் கொண்டது.

இன்று வெற்றிகரமாக செயல்படும், கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு காரணமானவர் டி.வி.ஆர்.,அன்று உசிலம்பட்டியும், ஆண்டிபட்டியும் நாளிதழ்களின் செய்திகளில் காணக் கிடைக்காத குக்கிராமங்கள். உசிலம்பட்டி முதல் போடி வரை 1975 ல் பெரும் மணல் காற்று வீசியது. விவசாய நிலங்கள், கிணறுகள் மணலால் மூழ்கி போயின. மரங்கள் சாய்ந்தன. விவசாயிகள் பெரும் துயரடைந்தனர். மணலை அப்புறப்படுத்த தனி ஒரு விவசாயி யால் முடியாது. ராட்சஸ இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கு அரசின் பார்வைக்கு தகவல் செல்வதே வழி. வெளிஉலகத்திற்கு தெரியாத இந்த தகவலை படங்களுடன் ஒருபக்க செய்தியாக வெளியிட, உயரதிகாரிகள் சென்னையில் இருந்து இயந்திரங்களுடன் வந்து விவசாயிகளுக்கு உதவினர்.இதனை பற்றி டி.வி.ஆர்., நிருபர்களிடம் ‘இவையே அவசியமான செய்திகள். குடிகாரன் குடிபோதையில் யாரையாவது வெட்டி வீழ்த்தினால் அது முக்கிய செய்தி அல்ல; வாழ வேண்டிய, வாழ்விக்க வேண்டிய மனிதன் சாகும் நிலைக்கு போவதை எழுதுங்கள்’ என்றார்.

இன்று காஷ்மீர்—கன்னியாகுமரி ரயில் பாதை இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் டி.வி.ஆர்., திருவனந்தபுரம்–கன்னியாகுமரி–திருநெல்வேலி ரயில் பாதைக்காக பலமுறை செய்திகள் எழுதினார். ‘பாராளுமன்றத்தில் பேசுங்கள்; அதனை செய்திகளாக வெளியிடுகிறேன்’ என்று எம்.பி.,க்களை ஊக்கப்படுத்தினார். தென்னிந்திய பகுதிகளுக்கு ரயில் பாதை இல்லாமல், எப்படி ‘தென்னிந்திய ரயில்வே’ என்று கூற முடியும் என்று செய்தியில் கேள்வி எழுப்பினார். ஒரு செய்தியின் வயது ஒரு நாள் அல்ல; இருபது ஆண்டுகள் என நிரூபித்தார். ஆம், இருபது ஆண்டுகள் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1979 ல், முதல் ரயிலை கண்டது குமரி மாவட்டம்.

மலைகள், காடுகள் அழிவதால் பருவமழை பெய்யாது; நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என்று, இன்றைய நிலையை அன்றே உணர்ந்த தீர்க்கதரிசி டி.வி.ஆர்., இதனால் கண்மாய், ஆறு, குளங்களை காக்க, தொடர்ந்து கட்டுரை வெளியிட்டார்.’நமது குளங்கள்’ என்று டி.வி.ஆர்., 1963ல் வெளியிட்ட கட்டுரை தொடரை பார்த்து விட்டு, காமராஜ் அமைச்சரவையில், பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த ராமையா எல்லா குளங்களையும் பார்வையிட்டார். இது போன்ற கட்டுரைகள் எல்லாம் அன்றைய பத்திரிகை வாசகர்களுக்கு புதுமையானது. தினமலர் நாளிதழுக்கு மட்டுமே உரித்தான பார்வையாக இது அமைந்தது.துாத்துக்குடி துறைமுகம் அமைய டி.வி.ஆர்., பங்கு மிக முக்கியம். பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்பரப்பை தொலைநோக்கு பார்வையுடன் பயன்படுத்த அவர் வலியுறுத்தியது இரண்டு திட்டங்கள். அவை துாத்துக்குடி துறைமுகம் மற்றும் சேதுசமுத்திர திட்டம். துாத்துக்குடியில் துறைமுகம் அமைந்தாலும், தொழிற்சாலைகள் வருமா என்று பிரச்னை கிளம்பிய போது, துாத்துக்குடி யில் என்னென்ன தொழில்கள் துவங்க வாய்ப்பு உள்ளது என்று பட்டியலிட்டது தினமலர். 1967ல் திடீரென துாத்துக்குடி துறைமுக வேலை நிறுத்தப் பட்டதும் வெகுண்டெழுந்தார் டி.வி.ஆர்., துறைமுகத்தின் அவசியம் குறித்து வர்த்தகர்கள், அறிஞர்களின் எழுச்சியான பேட்டிகளை வெளியிட்டார். அப்போதைய பிரதமர் இந்திரா கவனத்திற்கு இது சென்றதும், ‘துறைமுக திட்டம் கைவிடப்படாது’ என அறிவித்தார்.கன்னியாகுமரி அல்லது நெல்லையில் பல்கலை,மருத்துவக் கல்லுாரி வேண்டும் என்று டி.வி.ஆர்., எழுதிய தன் விளைவே, தற்போது நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சித்த மருத்துவகல்லுாரி.

1974 ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது; எங்கும் பசி, பட்டினி, காலரா நோய். இதனை தினமும் ஒரு பக்க செய்தியாக வெளியிட்டார் டி.வி.ஆர்., இதன்பிறகே வெளி உலகம் இந்த துயரத்தை அறிந்தது. டில்லியில் இருந்த மத்திய உணவு அமைச்சர் ஷிண்டே, தினமலர் செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ராமநாத புரம் வந்து மூன்று நாட்கள் கிராமங்கள் தோறும் ஆய்வு நடத்தி, டி.வி.ஆர்., முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்தார்.

ஒரு குக்கிராமத்து பிரச்னையையும், தலைநகர் டில்லியின் கவனத்திற்கு நாளிதழ் மூலம் கொண்டு செல்ல முடியும் என்று, தகவல் தொடர்புகள் இல்லாத அந்த காலத்திலேயே நிரூபித்தவர் டி.வி.ஆர்., கொலையும், கொள்ளையும் தான் செய்தி அல்ல; மக்களின் கவலையும், தேவையும் செய்தியே! என்ற கோட்பாடுடன் தமிழ் நாளிதழ் களின் பார்வையை மக்கள் பக்கம் திருப்பிய தினஆளாற்., ‘மக்களின் பத்திரிகை’ என்றால் அது மிகை அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *