என்ன தவம் செய்தேனோ! – திரை விமர்சனம்

அரசியல்வாதியின் மகளுக்கும் தள்ளு வண்டியில் ஐஸ் விற்கும் தொழிலாளிக்கும் காதல் ஏற்பட அதை எதிர்த்து வரும் அரசியல்வாதிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விடுகின்றனர் காதல் ஜோடிகள். அது தெரிந்ததும் தன் மகளையும், அந்த பையனையும் கொலை செய்யும் நோக்கோடு அவர்களை ஊர் ஊராக தேடி வருகின்றனர் அரசியல்வாதியும் அவருடைய அடியாட்களும். அவர்கள் அண்டை மாநிலம் சென்று தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். அதை அறிந்து அவர்களை கொலை செய்வதற்காக ஆவேசத்துடன் விரட்டி வருகின்றார் அரசியல்வாதி. அவர்களைக் கண்டதும் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

கஜினி முருகன் அப்பாவி கதாநாயகனாகவும், அதே சமயம் பிரச்சனை சந்திக்கும் துணிவுள்ள இளைஞனாகவும் நடித்திருக்கிறார். கதாநாயகி விஷ்ணு பிரியா அப்பாவிடம் குறும்பு செய்யும் பெண்ணாகவும், காதல் என்று வரும்போது அப்பாவையே தூக்கி எறிந்துவிட்டு செல்லும் தைரியமிக்கப் பெண்ணாகவும் வருகிறார். பிரியா மேனன் இரண்டாவது கதாநாயகியாக கஜினி முருகனை காதலித்து விட்டுக் கொடுக்கமுடியாமல் வெகுளித்தனமாக இருக்கிறார். ஆர்.என்.ஆர். மனோகரன் அரசியல்வாதியாக தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். கொலை வெறியோடு செல்லும் காட்சிகளில் மனதைப் பதற வைக்கிறார். சிங்கம்புலியும் மயில்சாமியும் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

ஜாதி வெறி மற்றும் அரசியல் கௌரவம் அதற்காக நடக்கும் ஆணவக் கொலையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் முரபாசெலன். இணைந்த கைகள் கலைக்கூடம் எஸ்.செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அடுத்தடுத்த காட்சியில் என்ன நடக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது தேவ்குருவின் இசை.

என்ன தவம் செய்தேனோ – அரசியல் கௌரவத்தை காக்கும் ஆணவக் கொலை

-ஹேமா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *