லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்.; ஜீனியஸ் விமர்சனம்

நடிகர்கள்:  ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி மற்றும் பலர்.

இசை  – யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு – குருதேவ்

இயக்கம் – சுசீந்திரன்

தயாரிப்பு – ரோஷன்

நன்றாக படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் படிப்பு படிப்பு என்று மட்டும் இருந்துவிட்டால் நம் சிறு வயதில் எதை எல்லாம் இழந்துவிடுகிறோம் என்பதை சொல்கிறார் இந்த ஜீனியஸ்.

ரோஷனை நன்றாக படிக்க வைத்து எல்லா வகுப்பிலும் பர்ஸ்ட் ரேங்க் எடுக்க வைத்துவிடுகிறார் ஆடுகளம் நரேன்.

உறவினர்களின் நல்லது கெட்டது என எந்த விசேஷத்துக்கும் அனுமதி மறுக்கிறார். மேலும் விளையாட விடவும் மறுக்கிறார்.

அவனும் தந்தை கட்டளையை மீற முடியாமல் நன்றாக படித்து ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.

அங்கும் இவருக்கு மன அழுத்தம் தரும் வகையில் வேலைப்பளு தரப்படுகிறது. இதனால் மைண்ட் ப்ளாக் ஆகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். எனவே வேலையிழந்து தவிக்கிறார்.

மேலும் மன அழுத்தம் காரணமாக மென்டல் போல நடந்துக் கொள்கிறார். இதனால் திருமணத்திற்கும் பெண் கிடைக்காமல் போகிறது.

அப்போது இவரின் மாமா சிங்கம் புலி ஒரு ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார். அது என்ன ட்ரீட்மெண்ட். எப்படி குணமடைந்தார்? ஜீனியஸ் சாதித்துக் காட்டினாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தயாரிப்பாளர், பட நாயகன் எல்லாம் ரோஷன்தான். இவரின் முகத்தில் முதிர்ச்சியுள்ளது. ஆனால் நடிப்பில் முதிர்ச்சியில்லை.

நாயகியாக மலையாள நடிகை பிரியாலால். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். நாயகி என்றாலும் இடைவேளைக்கு பின்னர்தான் வருகிறார்.

விபச்சாரியாக வந்து ரோஷனை குணமடைய வைக்கிறார். அதுதான் எப்படி..? மென்டல் ஆனவர்களுக்கு இதுதான் மருத்துவமா? என்பதுதான் தெரியவில்லை.

அப்பா மற்றும் அம்மா: ஆடுகளம் நரேன் மற்றும் மீரா கிருஷ்ணன். தங்கள் பாத்திரம் அறிந்து உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மாமாவாக வரும் சிங்கம் புலி மாமா வேலை பார்க்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்க முயல்கிறார்.

மற்றபடி தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், சிங்கமுத்து ஆகியோர் வருகிறார்கள். போகிறார்கள். அவ்வளவுதான்.

யுவனின் இசையில் விளையாடு மகனே விளையாடு பாடலும் அந்த காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் ஓகே ரகம்.

குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. எடிட்டரும் தன் பணியை சிறப்பாக செய்து படத்தை 1 மணி 50 நிமிடத்தில் முடித்துவிட்டார்.

தான் சொல்ல வந்த விஷயத்தை முதல் பாதியில் சிரமம் இல்லாமல் சொல்லிவிட்டார் டைரக்டர் சுசீந்திரன்.

இரண்டாம் பாதியில் கதையை விபச்சாரத்துக்கு கொண்டு சென்று கதையோட்டத்தை மாற்றி ஜீனியஸ் மீதிருந்த மரியாதையை கெடுத்து விட்டார்.

குழந்தைகள் காலையில் படிக்க வேண்டும். மாலையில் விளையாட வேண்டும் என க்ளைமாக்ஸில் டைட்டில் கார்டு போடுகிறார். அதை காட்சிகளில் சொல்லியிருந்தால் இந்த ஜீனியஸ் நன்றாக ஸ்கோர் செய்திருப்பார்.

ஜீனியஸ்… லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *