கடைக்குட்டி சிங்கம்-திரைவிமர்சனம்

ஐந்து பெண் பிள்ளைகள், இரண்டு மனைவிகள் இருப்பினும் ஆண் வாரிசுக்காக மூன்றாவது திருமணம் செய்ய நினைக்கிறார் சத்யராஜ். அவர் எதிர்பார்த்தது போல கார்த்தி பிறக்கிறார்.
ஐந்து அக்காக்கள் முறை பெண்கள் என குடும்ப பாரத்தை சுமக்கிறார் கார்த்தி. இதற்கிடையில் முறைப் பெண்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் கார்த்திக்கை ஒரு தலையாக காதலிக்க, கார்த்திக்கோ சாயிஷாவை விரும்புகிறார்.

அங்கே குடும்பத்தாரிடையே பிரச்சனை தொடங்குகிறது. போதாக்குறைக்கு சாயிஷாவிற்கும் அத்தை பையனான சௌந்தரராஜன் இருக்கிறார். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கிறாரா? காதலியை கரம் பிடிக்கிறாரா? முறை பெண்கள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.

விவசாயியாக வரும் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் விவசாயி வேடம் கார்த்திக்கு பொருத்தமானதாக இல்லையோ என்று தோன்றுகிறது. சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சாயிஷா செயற்கையாக தோன்றுகிறார். சத்யராஜ் ஆண் வாரிசு வேண்டும் என கேட்கும் காட்சிகளிலும் சரி, தன் மகன் வாழ்க்கை தான் முக்கியம் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் தூக்கியெறியும் காட்சிகளிலும் நெகிழ வைக்கிறார்.

சூரி சமயத்திற்கேற்ப வசனங்கள் பேசி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், பானுப்ரியா போன்று பெரிய நடிகர்கள் பட்டாளங்கள் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இயக்குநர் பாண்டிராஜ் வசனங்களில் கைத்தட்டல் பெறுகிறார். அரசாங்கத்தையும் தாக்கியிருப்பது கதையோடு ஒன்றிவிடுவதால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதாபாத்திரங்களுக்கு தமிழில் பெயர் சூட்டியிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு. கதாநாயகி தேர்வில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். டி.இமானின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சூர்யாவின் 2டி என்டெர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடைக்குட்டி சிங்கம் – அனைவரையும் வாழவைக்கும் விவசாயி.

– ஹேமா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *