காசு மேல காசு – திரை விமர்சனம்
தான் கோடீஸ்வரனாகும் கனவு நனவாக வேண்டுமானால் தன் மகன் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் மூலம் வரும் வரதட்சணையால் தன் எண்ணம் ஈடேறும் என்று பேராசைக் கொள்கிறார் மயில்சாமி.
அது காதலால் தான் சாத்தியம். எனவே, தன் மகன் ஷாருக்கை காதலிக்கும்படி வற்புறுத்துகிறார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப ஷாருக்கும் காயத்ரியைக் காதலிக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்ணான காயத்ரியை ஒரு கடத்தல் கும்பல் கடத்திவிட அவளைக் காப்பாறினால் அவள் அப்பாவிடம் நற்பெயர் எடுத்துவிடலாம். அதன்மூலம் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கலாம் என்ற குறுக்கு புத்தியில் கடன் வாங்கி கடத்தல் கும்பலிடம் பணத்தைக் கொடுத்து காயத்ரியை மீட்டு வரச் சொல்லி தன் மகனை அனுப்புகிறார் மயில்சாமி.
ஷாருக்கோ கடத்தல்காரன் என நினைத்து ரூ.10 லட்சத்தை பிச்சைக்காரன் கே.எஸ்.பழனியிடம் கொடுத்துவிடுகிறார். இதற்கிடையில் தங்களது பெண்களை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்த மயில்சாமியின் அக்கா நளினியும் லொள்ளுசபா சாமிநாதனிடம் சாபம் விட்டு செல்கின்றனர்.
ஷாருக் காயத்ரியை காப்பாறினாரா? பிச்சைக்காரனிடம் சென்ற பணம் என்ன ஆனது, மயில்சாமியின் பேராசை என்னவாயிற்று. என்பதே படத்தின் மீதிக்கதை.
பணம் மட்டுமே வாழ்க்கையின் பிரதானம் என்று பேராசைக்காரனாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வெளுத்து வாங்கியிருக்கிறார் மயில்சாமி. மதுமிதாவும் நளினியும் வாய்ச் சண்டையிடும் காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
ஒரு காட்சியில் வந்தாலும் அத்தனை காமெடி பட்டாளங்களையும் தாண்டி கவனத்தை தன் வசம் திருப்பியிருக்கிறார் கோவைசரளா. பிச்சைக்காரனாகவே வாழ்ந்திருக்கிறார் கே.எஸ்.பழனி. ஷாருக்கும், காயத்ரியும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
பேராசைப்படக்கூடாது, உழைத்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இதுவரை வசனம் மட்டுமே எழுதி வந்த கே.எஸ்.பழனி. வசனங்கள் படத்திற்கு தூண் என்றால் இசை அதற்கு துணையாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக இந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சிமெண்ட் கம்பெனி முதலாளி என்று மயில்சாமி ஷாருக்கிடம் கூற, அதற்கு ஷாருக், அதுனால தான் இவ்வளவு பெரிய வீடு கட்ட முடிந்தது, காசு கொடுத்து சிமெண்ட் வீடு கட்டினால் எவ்வளவு செலவாகும் என்று கேட்பது காமெடியின் உச்சம்.
ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் பி.ஹரிஹரன் தயாரிக்க பி.உதயகுமாரும், பி.ராதாகிருஷ்ணனும் இணை தயாரிப்பு செய்திருக்கிறார்கள்.
காசு மேல காசு – சிரி(ந்தி)த்து வாழ வைக்கும்
– ஹேமா