தேவர் மகன் 2 படத்துக்கு “தேவேந்திரர் மகன்” தலைப்பு வைங்க கமல்…: கிருஷ்ணசாமி கடிதம்
விரைவில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.
அப்படத்தை முடித்துவிட்டு தேவர் மகன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கப்போவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு கண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
என்னிடத்திலிருந்து இதுபோன்ற ஒரு கடிதத்தை நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களது திரைப்படப் பெயர் விவகாரங்களால் நம்மிடையே மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது.
கமல்ஹாசன் என்ற நடிகரை மிகமிக மதிக்க கூடியவன் நான். ஆனால், உங்களது திரைப்படப் பெயர்கள் தமிழ் சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.
நீங்கள் இப்பொழுது திரைத்துரையிலிருந்து அரசியலுக்கும் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். இந்தியர் – தமிழர் என்ற சொற்றொடர்கள் வெளிப்படையாக இருந்தாலும் தமிழர்களிடையே சாதி அடையாளங்களுக்கான பெரும் போர் நடந்துகொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் கருதினேன்.
தற்போது தேவர் மகன் 2 என்ற படம் எடுக்க இருப்பதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளீர்கள்.
ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த அந்த திரைப்படம் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
1993-ல் வெளியான உங்களது திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக,இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துக் கொண்டே இருக்கிறது.
1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது –2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்.
பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை,
“தேவேந்திரர் மகன்” என்று தங்களுடைய படத்திற்கு பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கவுரவத்தையும் பெற்றுத்தரும்; அந்தப்படமும், நல்லமுறையில் ஓடும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.