ஊடகத்திலுள்ள பெண்களுக்கான அமைப்பு முழு ஓர்மையுடன் நிற்கிறது

இந்திய ஊடகங்களில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்கள் பற்றி துணிச்சலுடன் பேசி வரும் அனைவருடனும் ஊடகத்திலுள்ள பெண்களுக்கான அமைப்பு (Network of Women in Media) முழு ஓர்மையுடன் நிற்கிறது. ஊடக உலகில் உள்ள நம் எல்லோருக்கும் இது மிக முக்கியமான ஒரு தருணம். வேறு பல துறைகளில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் நாம் தொடர்ந்து பார்த்தும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்போது நம் மீது கவனம் திரும்பியிருக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எந்த அச்சுறுத்தலும் மனத்தடையும் இல்லாமல் இன்னும் அதிக பெண்கள் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பேச முன் வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

பாலியல் துன்புறுத்தல்களில் தொடர்ந்து ஈடுபட்ட பலர் இப்போதும் எந்த விசாரணையும் இன்றி பாதுகாக்கப்பட்டு வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களை மிகவும் வருத்தமடைய செய்கிறது. பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை கையாள தவறுவதோடு மட்டுமல்லாமல் அதை சுற்றி ஒரு மௌனத்தையும், அதை எழுப்புபவர்கள் மீதான எதிர் குற்றசாட்டுகளையும், அவர்கள் மீது கண்காணிப்பு ஏவுவதையும் மறைமுகமாக ஊக்குவிக்குமளவுக்கு இந்திய செய்தியறைகளில் நிலவும் ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நிகழ்வுகளின் அடிப்படையில், எங்கள் அமைப்பு (NWMI) சில கோரிக்கைகளை முன் வைக்கிறது.

1) ஊடக கல்லூரிகள், துறைகள், சங்கங்கள், பிரஸ் கிளப்புகள் உள்ளிட்ட எல்லா ஊடக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தாமாக முன்வந்து ஏற்று, விசாரணை நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும்.

2) எல்லா ஊடக நிறுவனங்களும் ஊடக கல்லூரிகளும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சட்டம்,2013ன் கீழ் முறையாக நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்களை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும். சரி பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். சட்டத்திலோ பெண்களின் உரிமைகளிலோ நிபுணத்துவம் பெற்ற, சார்பில்லாத பெண் யாராவது வெளி உறுப்பினராக இருக்க வேண்டும். குற்றசாட்டுகள் வரும் போது அதை உடனடியாக கேட்டு, உரிய நேரத்தில் விசாரணை நடத்தும் வகையில் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். குழுவின் சிபாரிசின் பெயரில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குற்றசாட்டை எப்படி முன் வைப்பது என்பது பற்றிய செயல்முறையும் தெளிவாகவும் பரவலாகவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

3) பாலியல் துன்புறுத்தலுக்கெதிரான கொள்கையும் விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பது பற்றியும் பரவலாக எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைப்பது, சுற்றிறிக்கை விடுவது போன்றவற்றை எல்லா ஊடக நிறுவனங்களும் ஊடக கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும். அலுவலகத்தில் மட்டுமல்லாமல் நிறுவனத்தின் இணையத்தளத்திலும் அது இடம் பெற்றிருக்க வேண்டும். பணி நியமன ஆணைகளிலும் நடத்தை விதிகளிலும் பாலியல் துன்புறுத்தலுக்கான எதிர்வினைகள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

4) ஊடகத்துறையின் தன்மையை உணர்ந்து, நிர்வாகமும் விசாரணைக் குழுவும் பணி நிமித்தம் களங்களில் அல்லது பிற துறையினருடன் பேசும் போது நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரிக்க முன் வர வேண்டும். பணிபுரிபவரின் பாதுகாப்பை விட கட்டுரைகள் முக்கியமில்லை என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

5) பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013ன் அடிப்படையில் பணி பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்யும் சுதந்திர ஊடகவியலாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் அவர்கள் பங்களிக்கும் நிறுவனங்களின் பாலியல் துன்புறுத்தலுக்கெதிரான கொள்கை மற்றும் விசாரணை குழுவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

6) இந்திய குற்றவியல் சட்டம் அல்லது வேறு ஏதும் சட்டத்தின் கீழ் புகாரளிக்க வேண்டும் என்று ஒரு நபர் விரும்பினால் அவருக்கு எல்லா ஊடக நிறுவனங்களும் ஊடக கல்லூரிகளும் உரிய உதவியை வழங்க வேண்டும்.

7) பாலின பிரச்னைகளை மைய நீரோட்டத்துக்கு கொண்டு வரும் கொள்கைகள் வகுக்கவும், வருடத்துக்கு இரண்டு முறையாவது பாலின நுண்ணுணர்வு குறித்து பயிலரங்குகள் நடத்தவும் எல்லா ஊடக நிறுவனங்களும் ஊடக கல்லூரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) புகாரளிப்பவர், குற்றம் சாட்டப்பட்டவர் இரு தரப்பினருக்கும் பணிரீதியான ஆலோசனைகளை வழங்க எல்லா ஊடக நிறுவனங்களும் ஊடக கல்லூரிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

9) இது வரை வந்த புகார்கள் செய்தி ரீதியாகவும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியவை. இதை மூடி மறைக்காமல், பெரிய பாரம்பரிய ஊடகங்கள் இது பற்றிய செய்திகளை பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை நிறுத்த, ஊடகத்துறை சுய பரிசோதனையில் ஈடுபடவேண்டும்.

இது குறித்து உரையாட வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கும் ஆதரவளிக்கவும், விசாரணைக் குழுக்கள் அமைக்க மற்றும் வலுப்படுத்த உதவவும் ஊடகத்திலுள்ள பெண்களுக்கான அமைப்பு தயாராக இருக்கிறது. எங்களை editors@nwmindia.org என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *