கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்

கள்ளக்காதலால் தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்ற வழக்கில் தாய் அபிராமி அளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

சென்னை: குன்றத்தூரை சேர்ந்த வங்கி பணியாளரான விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கும் அப்பகுதியில் பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி கணவர் விஜய் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார்.

அபிராமி தலைமறைவானதையடுத்து அவரது கணவர் விஜய் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமியை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், முதலில் அவரது கள்ளக்காதலர் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து, நாகர்கோவில் விரைந்த போலீசார் அபிராமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இந்நிலையில் காவல்துறை விசாரணையின் போது அபிராமி அளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தனது கள்ளக்காதலுக்காக அபிராமி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதனால் கடந்த 30-ம் தேதி இரவு கணவர் மற்றும் பிள்ளைகள் தூங்கும் போது பாலில் விஷம் கலந்து அபிராமி கொடுத்துள்ளார். ஆனால் இதில் கணவரும் மகனும் தப்பித்து கொள்ள மகள் கார்னிகா மட்டும் இறந்து போய்விட்டார்.

மகள் இறந்தது தெரியாமல் அலுவலகம் கிளம்பிய விஜய், குழந்தைக்கு முத்தம் கொடுக்க சென்ற போது, அபிராமி அதனைத் தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜய் அலுவலகம் சென்ற பிறகு மகனுக்குப் பாலில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.பிறகு வீட்டை பூட்டி விட்டு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் அபிராமி. இதையடுத்து குன்றத்தூரில் உள்ள நகை கடை ஒன்றில் நகையை விற்று பணம் வாங்கிக் கொண்டு, கோயம்பேடு சென்று இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு, பேருந்து ஏறி திருவனந்தபுரம் சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் சுந்தரம் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *