நோட்டா திரை விமர்சனம்
நடிகராக இருந்து முதல்வர் ஆனவர் நாசர். இவர் மீது ஒரு ஊழல் வழக்கு வருகிறது. எனவே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இரவோடு இரவாக தன் மகனை தற்காலிக முதல்வராக்க முயல்கிறார்.
வேறு வழியில்லாமல் அமைச்சர்கள் ஒத்துக் கொள்ள, கவர்னரும் அவரது மகனை பதவியில் அமர்த்துகிறார்.
குடித்துவிட்டு தோழிகளுடன் மற்றும் நண்பர்களுடன் சுற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு அரசியல் என்றாலே என்ன வென்று தெரியாது.
எந்த பைலை காட்டினாலும் கையெழுத்து போடுகிறார்.
இதனிடையில் நாசர் மீது ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவரே எம்எல்ஏ. ஆகி பொறுப்பும் ஏற்கிறார்.
நாட்டில் நடக்கும் அவலங்களை பார்த்து தானே அந்த பிரச்சினைகளை முதல்வராக இருந்து சரி செய்ய பார்க்கிறார்.
அப்போது ஜாமீனில் வெளியே வருகிறார் நாசர். அதற்குள் சத்யராஜின் ஆலோசனைப்படி கட்சிக்குள் நிறைய குளறுபடிகளை செய்துவிடுகிறார் விஜய்.
ஆட்சி நன்றாக செய்வதால் நல்ல பெயரும் கிடைக்கிறது. ஆனால் தன் மகனே தன்னை ஏமாற்றுவதை பொறுத்துக் கொள்ள முடியாத நாசர் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்.
அதன்பின்னர் என்ன ஆனது? ஆட்சிக்கு யாருக்கு போனது? நாசர் என்ன செய்தார்? விஜய் தேவரகொண்டா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிச்சவங்க நடிப்பு எல்லாம் எப்படி..?
இளம்வயது முதல்வரை நாம் நிஜத்தில் பார்க்க முடியாது. இதில் பார்த்து சந்தோஷப்பட்டு கொள்வோம். ப்ளேபாய் காட்சிகள் ஓரிரு காட்சிகளிலே இருக்கிறது. மற்ற அனைத்தும் காட்சிகளிலும் முதல்வராக வருகிறார் விஜய். ஆனால் முகத்தில் எப்போதும் சீரியஸ் ரேகையே ஓடுகிறது.
தமிழக அரசியலை எப்படி எல்லாம் கலாய்க்க முடியுமோ? அப்படி எல்லாம் கலாய்த்து முதல்வரான பின் சில அதிரடி காட்டுகிறார்.
படத்தில் முதல் நாயகி மெஹ்ரினுக்கு வேலையே இல்லை. பாடல் கூட இல்லை. இன்னொரு நாயகி சஞ்சனா கேரக்டர் கனிமொழி கேரக்டர் போல் உள்ளது. முதலில் மிரட்டலாக தெரிந்தாலும் பின்னர் அதிலும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் டைரக்டர்.
நாசருக்கு பலமான வேடம். அரசியல்வாதியாக அசத்தியுள்ளார். உடைந்த மூக்கை வைத்துக் கொண்டு சக்கர நாற்காலியில் இவர் போடும் வில்லன் திட்டங்களும் சூப்பர்.
பத்திரிகையாளராக சத்யராஜ். இவரின் ஆலோசனைப்படி தான் நாயகன் ரவுடி சிஎம். ஆக செயல்படுகிறார்.
எம்.எஸ். பாஸ்கரின் நிலைதான் இன்றைய பல அரசியல் தொண்டர்களின் நிலையாக இருக்கிறது. இவரின் கேரக்டர் நிறைவை தருகிறது.
கருணாகரன், யாசிகா ஆனந்த் இருவரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் தெலுங்கு பாடலாய் உள்ளது. பின்னணி இசை மட்டும்தான் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் இவரது மிரட்டல் இசை அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை என்பதுதான் வருத்தம்.
சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. அவர் இல்லை என்றால் படத்தை ரசித்திருக்கவே முடியாது.
தமிழகத்தின் பழைய அரசியலையும் இன்றைய காமெடி கூத்துக்களையும் குத்தி காட்டும்படி செய்திருக்கிறார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.
ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், ஸ்டாலின், ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சுற்றியே கதை நகர்கிறது.ஆனால் காட்சிகள்தான் மனதில் ஒட்டவில்லை.
போலி சாமியார், பினாமி பெயரில் பணம், ஆற்றங்கரையில் சாமியார் ஆக்ரமிப்பு, ஜெயா மருத்துவமனையில் அனுமதி, கூவத்தூர் ரிசார்ட், சென்னை செம்பரபாக்கம் ஏரி வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.
நோட்டா என்றால் நமக்கு எந்த வேட்பாளர்களையும் பிடிக்கவில்லை என்பதுதான். ஆனால் அது குறித்து படத்தில் ஒரு வரி கூட இல்லை.
நோட்டா… அலட்சிய அரசியல்.