தாவோ ஒரு தங்கக்கதவு

தெய்வீக நிலையோடு இரண்டறக் கலந்து விடும்படியானதோர் தெய்வீகம் வேண்டுமென்றால் முதலாவதாக உங்களுக்குள் இருக்கும் ‘நான்’ இறக்க வேண்டும். இதுதான் ’தாவோ’வின் உள்நோக்கு. தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர். அவ்வளவுதான்.

தாவோ என்ற பெயர் அழகாக இருக்கிறது. கடவுள் என்ற பெயரை , அந்த வார்த்தையை, நமது பூசாரிகளும், பாதிரிகளும், மாசுபடுத்திவிட்டார்கள். கடவுளின் பெயரால் காலம் கலமாக மக்களைச் சுரண்டிக்கொண்டிருந்து விட்டார்கள். இவர்களுடைய சுரண்டலால், இவர்களுடைய பித்தலாட்டங்களால் இப்போது கடவுள் என்ற வார்த்தையே அசிங்கமாகப் போய்விட்டது.

அறிவுள்ள எந்த மனிதனும் கடவுள் என்ற வார்த்தையின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறான். கடவுளின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நடந்த அநியாயங்களை, கொலைகளை, கொள்ளைகளை, கற்பழிப்புகளை அந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது. அதனால் கூடிய மட்டில் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பதையே தவிர்த்துவிடுகிறான் அவன்.

உலகிலேயே மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘கடவுள்’ தான். வேறு எந்த வார்த்தையையும் விட, இந்த வார்த்தையின் பெயரால் தான் அதிகபட்ச கொடுமைகள் நடந்திருக்கின்றன.

அதனால் , தாவோ என்ற வார்த்தை மிக அழகாகத் தோன்றுகிறது. உங்களால் தாவோவை வழிபட முடியாது. ஏனென்றால் தாவோ எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தாவோ என்றால் ஒரு மனித உருவத்தின் நினைவு வருவதில்லை. தாவோ ஓர் ஆள் இல்லை, அது ஓர் ஆதார விதி. நீங்கள் கடவுளை வணங்கலாம். ஆதார விதியை வணங்க முடியாது. அது மடத்தனமாக, கேலிக்கூத்தாக இருக்கும்.

நீங்கள் புவியீர்ப்பு விதியை வணங்குவீர்களா? இல்லை, விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா? அது அபத்தமாக இருக்கும்.

தாவோ என்பது ஒட்டுமொத்த பிரஞ்ச இருப்பையும் இணைக்கும் ஆதார விதி. இந்த பிரபஞ்சம் என்பது தற்செயலாக நடந்த ஒரு விபத்தில்லை. அது தான்தோன்றித்தனமான குழப்பமும் இல்லை. அண்டங்களின் படைப்புக் கோட்பாட்டின்படி உருவான ஓர் ஒழுங்குமுறைதான் இந்த பிரபஞ்சம்.

விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அதில் அதீத ஒழுங்கு தெரிகிறதல்லவா? பூமி சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுகிறது. மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. நமது சூரிய மண்டலமே ஒட்டுமொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் ஓர் அதீத ஒழுங்கு உள்ளீடாக மிளிர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒழுங்குதான் தாவோ. முழுமையின் இசைவுதான் தாவோ.

நல்ல வேளை, இதுவரை யாரும் தாவோவிற்காக கோயில்கள் கட்டவில்லை. சிலைகள் வைக்கவில்லை. பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. பூசாரிகள் இல்லை. வேறு எந்த இடைத்தரகர்களும் இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை. அதுதான் தாவோவின் அழகு.

அதனால்தான் தாவோவை ஒரு கொள்கை என்றோ கோட்பாடு என்றோ நான் சொல்லவில்லை. அதை மதம் என்றுகூட நான் சொல்லவில்லை. அதைத் தர்மம் என்று அழைக்கலாம். தர்மம் என்றால் தாங்கி நிற்பது என்று பொருள். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதுதான் தர்மம். இந்தப் பொருளில்தான் நான் தாவோவை தர்மம் என்கிறேன். புத்தர் தாவோவை தர்மம் என்றுதான் சொன்னார்.

ஓஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *