பரியேறும் பெருமாள் திரை விமர்சனம்

நடிகர்கள்:  கதிர், ஆனந்தி, யோகிபாபு, வில்லன் கராத்தே வெங்கடேஷ், மாரிமுத்து, மற்றும் பலர்.

 இசை  – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – ஸ்ரீதர்

தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் டைரக்டர் ரஞ்சித்

மக்கள் தொடர்பாளர் – குமரேசன்

கதை எப்படி..?

கீழ் சாதியை சேர்ந்த கதிர், தன் சமுதாயத்தை முன்னேற்ற வக்கீலுக்கு படிக்க நினைத்து அதன்படி சட்டக்கல்லூரியில் சேர்கிறார்.

அங்கு சக மாணவன் யோகிபாபு, மாணவி ஆனந்தியுடன் நட்பாக பழகுகிறார்.

ஆனந்தியும் கதிருடன் மிக நெருக்கமாக பழகுகிறார். அதன்படி ஒரு நாள் தன் வீட்டுக்கு நிகழ்ச்சிக்கு கதிரை மட்டும் அழைக்கிறார்.

அங்கு கதிர் செல்லும்போது ஆனந்தியின் அப்பா மாரிமுத்து அவரின் சாதியின் காரணமாக அவரை அடித்து துரத்துகிறார்.

தன் மகளிடம் இனி பழகக்கூடாது எனவும் கண்டிக்கிறார்.

ஆனந்தியின் அண்ணாவும் கதிரை அவமானப்படுத்துகிறார். மேலும் கதிரை தீர்த்துக் கட்ட கராத்தே வெங்கடேசிடம் சொல்லி கட்டம் கட்டுகிறார்கள்.

அதன்பின்னர் என்ன ஆனது? கதிர் பிழைத்தாரா? சட்டம் படித்து வக்கீல் ஆனாரா? ஆனந்தியை கரம் பிடித்தாரா? சாதியினரை முன்னேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் எப்படி..?

பரியேறும் பெருமாள்.. இந்த பெயரை கதிர் கல்லூரியில் சொல்லும்போதே கவனம் ஈர்க்கிறார். கல்லூரிஆசிரியரை டீச்சர் என்று அழைக்கும்போதே அவரின் அப்பாவித்தனம் தெரிகிறது.

நண்பர்களுடன் ஆடல் பாடல், ஆனந்தியுடன் காதல், யோகிபாபுவுடன் நட்பு என வாழ்ந்திருக்கிறார் கதிர்.

தன் தந்தையை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தும் காட்சியிலும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் கதிரின் நடிப்புக்கு கரகோஷம் தியேட்டரில் காதை பிளக்கிறது.

காமெடி மட்டுமில்லை தன்னால் கண் கலங்கவும் வைக்க முடியும் என நிரூபித்துள்ளார் யோகிபாபு.

அருமையான நடிப்பில் ஆனந்தி. இப்படியொரு கல்லூரி தோழி நமக்கும் வேண்டும் என ஒவ்வொரு மாணவனையும் ஆசைப்பட வைக்கிறார் ஆனந்தி.

மகளிடம் நல்லவனாக நடித்து மிரட்டும் ஜாதி வெறியராக மின்னுகிறார் மாரிமுத்து.

ஓரிரு படங்களில் தலை காட்டிய கராத்தே வெங்கடேசுக்கு இதில் மிரட்டல் வேடம். வயதான வேடம் என்றாலும் இளமை துள்ளல் அதிகம். சத்தமில்லாமல் ஒவ்வொரு கொலையாக செய்வது அசத்தல்.

இவர்களுடன் சக கல்லூரி மாணவர்களின் நடிப்பும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் கிராமத்து மெல்லிசை. கருப்பி பாடல் நாய் வளர்ப்பவர்களை கவரும். கானா பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கிறது.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம். கிராமத்து காட்சிகளை மண் வாசனை மாறாமல் வடிவமைத்திருக்கிறார்.

முக்கியமாக க்ளைமாக்ஸில் ரெண்டு டீ கிளாஸ் நடுவில்  ஒரு மல்லிகை பூவை வைத்து, அன்பு இருந்தால் சாதி பிரிவினை இருக்காது என்பதை காட்டியிருக்கிறார்.

சாதிக்கு நிறமிருந்தாலும் மல்லிகையுடன் சேர்ந்தால் அதில் மறைந்து மணக்கும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு நல்ல படைப்பை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரஞ்சித். ரஞ்சித்தின் சாயல் சில சாயம் பூசும் காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது.

சாதி பிரிவினை என்றாலும் அதில் எங்கும் சாதி சாயம் பூசாமல் சொன்னதற்காக மாரி செல்வராஜை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

பரியேறும் பெருமாள்… ஜாதியற்ற சமூகம் மலர ஒரு காவியம்.

Leave a Reply

Your email address will not be published.

7 − 5 =