ஈ . வெ . ரா. பெரியார் பிறந்த நாள் இன்று =செப் -17
ஈ . வெ . ரா. பெரியார் பிறந்த நாள் இன்று =செப் -17
பெரியார் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு!
அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்!
அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்!
பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய் தவர்.
அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளிமையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர். அவரது பிறந்த நாளான இன்று பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்:
“நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன்”. (புரட்சி 17-12-1933).
“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைக ளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.” (குடியரசு 11.9.1927)
“சிலரின் அருவருப்புக்கோ, கோபத்திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ்விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்… …. … ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங் கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத்தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம் பிய உணர்ச்சியை – உடனே உதறித்தள்ளுங்கள்.”