மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் பிளாஸ்டிக் தடை

🎯மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் பிளாஸ்டிக் தடை இன்று அமல்*

* *மீறினால் ரூ5,000 முதல் ரூ25,000 வரை அபராதம்*

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடையை மீறுவோருக்கு ரூ5,000 முதல் ரூ25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் தெர்மாகோல் பொருட்களையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

எனினும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களின் பயன்பாட்டுக்கு மாறிக்கொள்வதற்கு வசதியாக அரசு மூன்று மாதகால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் இன்று முதல், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்த தடையுத்தரவை அமல்படுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் நகராட்சிகளும் இதர உள்ளாட்சி மன்றங்களும் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்துள்ளன. மும்பையில் இந்த தடையை அமல்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை தடுக்கவும் 250 ஆய்வாளர்கள் அடங்கிய படைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
யாராவது தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அது முதல் தடவையாக இருந்தால் அவர்களுக்கு ரூ5,000 அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவை செய்தால் அபராத தொகை ரூ10,000 ஆக இருக்கும். மூன்றாவது முறை அந்த தவறை செய்யும்பட்சத்தில் ரூ25,000 அபராதம் மற்றும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிளாஸ்டிக் தடையை செயல்படுத்துவது ஏற்கனவே தாமதமாகி இருப்பதால் பொதுமக்களுக்கு மேற்கொண்டு கால அவகாசம் எதுவும் வழங்க முடியாது என்று மும்பை மாநகராட்சி திட்டவட்டமாகI கூறியுள்ளது. பொதுமக்களும் கடைக்காரர்களும் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த அவர்களுக்கு ஏற்கனவே 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. கேட்டரிங், தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட், நடைபாதை வியாபாரிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

தடையை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெறுவதை தடுப்பதற்காக மாநகராட்சி ஆய்வாளர்களுக்கு அபராத தொகைக்கான ரசீது கொடுக்க எலக்ட்ரானிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை மாநகராட்சி கமிஷனர் (சிறப்பு) நிதி சவுத்ரி தெரிவித்தார்.
தடையை மீறும் பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ₹5,000ல் இருந்து ₹200 ஆக குறைக்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் அதன் கோரிக்கையை சட்ட குழு நிராகரித்து விட்டது.

மும்பை மாநகராட்சி இதுவரை நகரம் முழுவதிலும் இருந்து 1.42 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துள்ளது. இதேபோல பல்வேறு கடை உரிமையாளர் சங்கங்களும் 2 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துள்ளன.
இதற்கிடையே பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக மும்பை மாநகராட்சி ஜூன் 22ம் தேதியில் இருந்து ஜூன் 24ம் தேதி வரை மும்பை ஒர்லி பகுதியில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சுமார் 60 கம்பெனிகள் மற்றும் 80 சுயஉதவி குழுக்கள் பங்கேற்கின்றன.

*தடை செய்யப்பட்ட பொருட்கள்*

* கைப்பிடி மற்றும் கைப்பிடி இல்லாத அனைத்து பிளாஸ்டிக் பைகள், பெட் பாட்டில்கள்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கப், கரண்டிகள், போர்க்குகள், கண்டெய்னர்கள்.
* ஒரு பொருளை பத்திரப்படுத்த பேக் செய்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட்.
* பிளாஸ்டிக் ஸ்டிரா, பவுச்கள், உணவுகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்.
* தெர்மாகோலில் செய்யப்பட்ட அனைத்து அலங்கார பொருட்கள்.

*தடையிலிருந்து விலக்கு பெற்ற பொருட்கள்*

* மருந்து வகைகளை பேக் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்.
* பிளாஸ்டிக் பால் பாக்கெட்கள்.
* தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை பேக் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள்.
* பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேக்.
* திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக்.

 

 

Maharashtra
Maharashtra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *