விஷால் பதவி விலக வலியுறுத்தி ஆபிஸுக்கு பூட்டு போட்டு போராட்டம்!

விஷால் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திற்கு வந்த பிறகு அதிரடியாக சில திட்டங்களை அறிவித்தார்.
அதில் முக்கியமாக திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீடு தேதிக்கு குழு என பல வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் சொன்னபடி அவரும் நிர்வாகமும் செயல்படவில்லை என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்தரப்பினர் வாட்ஸ்-அப்பில் மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் இன்று (டிசம்பர் 19) காலை 11:00 மணிக்கு தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.
அதன்படி இன்று  ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.
 அங்கு  சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனையடுத்து சங்க துணைத் தலைவர் கதிரேசன் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
திடீரென விஷால் அறைக்கு பூட்டு போட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மேலும், சங்க அலுவலகத்திலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வாசல் கதவுக்கு பூட்டுப் போட்டனர்.
இதனையடுத்து சங்கத்தின் சாவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்க உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *