ராட்சசன் திரை விமர்சனம்

நடிகர்கள்:  விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.

இசை  – ஜிப்ரான்

ஒளிப்பதிவு – பி. வி. சங்கர்

தயாரிப்பு – ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ்

கதை எப்படி..?

சைக்கோ த்ரில்லர் படம் எடுத்து சினிமா இயக்குனர் ஆக வேண்டும் நாயகன் தயாரிப்பாளர்களை தேடி அலைகிறார் நாயகன் விஷ்ணு விஷால்.

எனவே சைக்கோ கொலைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.

டைரக்டர் ஆவது அவ்வளவு ஈசியா என்ன? உனக்கு அது எல்லாம் செட்டாகாது. என்னைப் போல் நீயும் போலீஸ் ஆகிவிடு என்கிறார் இவரது மாமா முனீஷ்காந்த்.

அவரும் எப்படியோ எஸ்.ஐ. ஆகிவிடுகிறார். அவருக்கு கிடைக்கும் முதல் கேஸ் அவருக்கு சாதமாக அமைகிறது.

சென்னையில் உள்ள சில பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதை செய்வது ஒரு சைக்கோ தான் என கண்டுபிடிக்கிறார் விஷ்ணு.

இவரின் அதிக முயற்சி, அதிக ஆர்வம் இவரின் மேல் அதிகாரி சூசனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.

விஷ்ணு கொலையாளியை நெருங்கும் நேரத்தில் சஸ்பெண்ட் செய்து விடுகிறார் சூசன்.

இதனால் கடுப்பாகிறார் விஷ்ணு. அப்போது அவரின் அக்கா மகளும் கடத்தப்படுகிறார்.

அதன்பின்னர் என்ன செய்தார்? போலீஸ் வேலையை ராஜினாமா செய்தாரா? டைரக்டர் ஆனாரா? அல்லது சைக்கோ கில்லரை கண்டுப்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நடிச்சவங்க எல்லாம் எப்படி..?

விஷ்ணு விஷாலுக்கு ஏற்ற கதையா? அல்லது கதைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டாரா? என தெரியவில்லை. போலீஸ் கட்டிங் முதல் கம்பீரம் வரை தன் முறுக்கேற்றி அசத்தியிருக்கிறார் விஷ்ணுவிஷால்.

முண்டாசுப்பட்டி படத்தில் காமெடியாக விஷ்ணுவை இயக்கியிருந்தார் ராம்குமார். அதே டைரக்டர் தான். இதில் போலீஸ் யூனிபார்மில் கம்பீரம் காட்டியிருக்கிறார்.

நாயகி அமலாபால். அமைதியான வேடம். அழகான நடிப்பு. பெரிதாக வேலையில்லை.

காமெடியன் முனீஷ்காந்துக்கு இதில் முக்கியமான வேடம். அவரும் சரியாக கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். தன் மகளின் இறந்த உடலை கண்டபின் அவர் கொடுக்கும் ரியாக்சனில் நம் கண்களும் கலங்கும்.

யதார்த்த போலீஸ் காளி வெங்கட். சைக்கோ கில்லரை நெருங்கிவிட்ட பின் இவர் காட்டும் படபடப்பு நம்மையும் பற்றிக் கொள்ளும்.

உயர் அதிகாரியாக சூசன். சும்மா சொல்லக்கூடாது. இவரது கண்களிலேயே அந்த உயரதிகாரிக்கான கெத்து தெரிகிறது.

சூசனை கட்டிப் போடும் அந்த வயதான போலீசும் ரசிக்க வைக்கிறார்.

பேபி மோனிகா, மற்ற மாணவிகள், ராதாரவி, நிழல்கள் ரவி ஆகியோருக்கான பாத்திர படைப்புகள் கச்சிதம்.

பள்ளி மாணவிகளை மிரட்டும் அந்த கண்ணாடி ஆசிரியர் செம மிரட்டல். இவர்தான் கொலை செய்கிறாரோ என பார்வையாலே நடித்திருக்கிறார்.

இவர் மாணவிகளை இம்சை செய்யும் போது நமக்கே எரிச்சல் வரும். இவரைப் போல் ஆசிரியர்களிடம் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சைக்கோ கில்லராக வரும் அந்த ஆங்கிலோ இண்டியன் படத்திற்கு கூடுதல் பலம். அவரின் பாத்திர படைப்பை ரசித்து செய்திருக்கிறார். அவர் காட்டும் மேஜிக்கும் அந்த க்ளைமாக்ஸ் பைட்டும் வேற லெவல்.

ஒரே காட்சியில் கருணாகரன் வருகிறார். டயலாக் கூட இல்லை. பாவம் சார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி..?

த்ரில்லர் படங்களுக்கு பின்னணி இசைதான் எப்போதும் பலம். அதை புரிந்துக் கொண்டு ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

திக் திக் என படபடப்பான இசையை கொடுத்து நம்மை நகராமல் செய்துவிட்டார். கண்ணம்மா பாடல் ரசிக்க வைக்கிறது.

சான் லோகேஷின் படத்தொகுப்பில் குறையில்லை. ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

பள்ளி ஆசிரியரின் பாழடைந்த வீடு, சைக்கோ மேஜிக் கில்லரின் இடம், அந்த பாத்ரூம் என ஒவ்வொரு இடத்தையும் விருந்தாக்கி இருக்கிறார். கலை இயக்குனரையும் பாராட்டியே தீர வேண்டும்.

ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை போராடிக்காமல் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ராம்குமார். ஹேட்ஸ் ஆஃப் சார்.

சைக்கோவிடம் மாட்டிக் கொண்ட அந்த மாணவி தப்பிக்கும் காட்சி, பேபி மோனிகா காட்சி, போலீஸ் ரவுண்ட் அப் காட்சிகள், சின்ன ப்ளாஷ்பேக் என அனைத்தையும் கையாண்ட விதம் அருமை.

ராட்சசன்… ரசிகனுக்கு பிடித்த ராட்சத அரசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *