‘வடசென்னை’யில் நிலத்தைக் கையகப்படுத்தும் ராம்குமார் யார்?!…

வாரத்துக்கு ஐந்து படங்கள் ரிலீஸானால் அதில் இரண்டு படங்களிலாவது இவர் அட்டனன்ஸ் போட்டுவிடுகிறார்.
சமீபத்தில் ரிலீஸான ‘வடசென்னை’ படத்தில் மீனவ மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிற அரசு அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிற கிளைமாக்ஸ் காட்சி. அந்த காட்சியில், நிலத்தைக் கையகப்படுத்துவது ஏன் என தனுஷுக்கு விளக்கம் கொடுத்துப் பேசுகிற அந்த கண்ணாடி போட்ட அரசு அதிகாரி இவரேதான். பெயர் ராம்குமார் பழனி.

மதுரைக்காரர். பி.இ., எம்.பி.ஏ. என பெரிய லெவல் படிப்பெல்லாம் முடித்தவர். ஐ.டி. நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்தவர்.

அவர் எப்படி கலைத் துறைக்குள் வந்தார்? இதுவரை எத்தனைப் படங்களில் நடித்துள்ளார்? நடித்த படங்களில் பிடித்த படங்கள் எதெல்லாம்? இப்படி ராம்குமார் பழனியிடம் கேட்க நிறைய கேள்விகள்.

அவரின் பதில்கள் இதோ…

”ஐ.டி. நிறுவனங்கள்ல வேலை செய்துகிட்டிருந்தப்போ அங்கே நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு நடிகர், நடிகைகளை ஒருங்கிணைக்கிற ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஸ்டார்ட் பண்ணேன். அந்த டைம்ல நிறைய நடிகர்களோட பழகிப்பழகி ‘நாமும் நடிச்சா என்ன’னு ஒரு ஆர்வம் வந்துச்சு.
ஓரு மொபைலும் ஒரு ஆப்பும் இருந்தா தத்தக்கா பித்தக்கானு டப்ஸ்மாஷ் பண்ணிட்டுப் போய்டலாம். ஆனா, சினிமாங்கிறது அப்படியில்லை. நடிக்கிறதுக்கு வெறும் ஆர்வம் மட்டும் போதாதுனு பட்டுச்சு. அதனால இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து முறையா நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல குறும்படங்கள்ல நடிக்கத் தொடங்கினேன். நான் நடிக்க வந்தது இப்படித்தான்!” என இன்ட்ரோ கொடுக்கும் ராம்குமார் அறிமுகமான படம் ‘காதலும் கடந்து போகும்.’
”படிச்ச படிப்புக்கான வேலைல இருந்து நடிக்கற ஆசைக்கு மாறினபிறகு ஏகப்பட்ட போராட்டங்கள். ஆறுவருஷ கடுமையான முயற்சிக்கு பிறகு வாய்ப்புகள் கிடைச்சு நடிச்சு 2016லதான் நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகத் தொடங்குச்சு. கடகடனு இதோ இப்போ ரிலீஸாகியிருக்கிற 2.ஓ’வரை 40 படங்கள் நெருங்கிட்டேன்.”

”உங்கள் நடிப்பு அனுபவம், கிடைக்கிற கேரக்டர்கள், நடிப்புக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் இது பத்தில்லாம்கொஞ்சம் பேசுவோம்…”

”ஐ.டி. நிறுவனங்கள்ல மேனேஜர் லெவல்ல வேலை பார்த்ததாலேயோ என்னவோ எனக்கு கிடைக்கிறதெல்லாம் அதே மாதிரியான மேனேஜர் கேரக்டர்களாத்தான் இருக்கும். ஆனா, எனக்கு வாய்ப்பு கிடைச்சு நடிக்கிற படங்கள், அதை இயக்குற இயக்குநர்கள் எல்லாம் இன்டஸ்ட்ரில ஹிட் கொடுத்தவங்களா அமையறது என்னோட லக்னு நினைக்கறேன்.

ஆமா, தொடரி’ படத்தோட கிளைமாக்ஸ்ல பிரேக் போட முடியாத சிக்கல்ல மாட்டி ரயில் தாறுமாறா ஓடிக்கிட்டிருக்கும். ரயிலை எப்படி நிறுத்தறதுனு டிபார்ட்மென்ட் அதிகாரிகள்லாம் கலந்து ஆலோசிச்சு அதுபடி செயல்படற படுபயங்கர பரபரப்பான காட்சி. அதுல முதன்மை அதிகாரியா கணேஷ் வெங்கட்ராமன் நடிச்சார். இயக்குநர் ஏ.வெங்கட் சார்லாம் அந்த காட்சில இருப்பார். ரயில்வே ஆபீஸரா நானும் அந்த காட்சில இருந்தேன். தனுஷ் படம். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரக்கூடிய காட்சி அது. 15 நாட்கள் வரை எங்களுடைய காட்சிக்கான ஷூட்டிங் இருந்துச்சு. பிரபு சாலமன் பெரிய டைரக்டர். அவர் இயக்கத்துல நடிச்சதெல்லாம் பெரிய அனுபவம். படத்துல என்னை அடையாளம் கண்டுக்கிட்டு நிறையப் பேர்கிட்டேயிருந்து நல்ல ரெஸ்பான்ஸ்!

அடுத்து, ஜெயம் ரவி நடிச்ச டிக் டிக் டிக்.’ அதுல சீஃப் சயிண்டிஸ்ட்டா ஜெயப்பிரகாஷ் நடிச்சிருப்பார். அவருக்கு கீழே சிலர் இருப்பாங்க. அதுல நானும் நடிச்சிருந்தேன். மிருதன்’, நாய்கள் ஜாக்கிரதை’னு முழுக்க வித்தியாசமான கதைகளைக் கையாள்கிற சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்துல வந்த,பட்ஜெட் படம். இந்திய சினிமாவுல ஸ்பே சயின்ஸை மையமா வெச்சு வந்த முதல் படமும்கூட. அந்த படத்துக்கு வரவேற்பும் நல்லா இருந்துச்சு. அதுல நடிச்சது எனக்கும் நல்ல அனுபவம்; நல்ல பெயர்!

அதுக்கடுத்து திருட்டுப் பயலே 2’ல சுசி கணேசன் இயக்கத்துல நடிச்சேன். தமிழ் சினிமாவுல முதல் அடல்ட் காமெடி ஜானர்ல வந்து தாறுமாறா ஹிட்டடிச்ச படம் ஹரஹர மகாதேவகி.’ ஹரஹர மகாதேவகிங்கிறது கதைல வர்ற ரெசார்ட்டோட பெயர். அந்த ரெசார்ட் மேனேஜரா நடிச்சிருந்தேன்.

இது மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம். என்னோட கரியர்ல முக்கியமான படம்னா ‘தீரன் அதிகாரம் 1’ படத்தை சொல்வேன். சதுரங்க வேட்டை ஹிட் படம் கொடுத்த டைரக்டரோட படம். அதுல கார்த்தி, போஸ் வெங்கட் அவங்க காம்பினேசன்ல கவர்மென்ட் டாக்டர் ரோல் பண்ணிருந்தேன். காவல்துறை உயரதிகாரி ஜாங்கிட் மேற்கொண்ட ஓரு அதிரடி ஆபரேஷனை மையப்படுத்திய உண்மைக் கதை. பெரிய லெவல்ல ஹிட்டான படம். அதுல நானும் நடிச்சிருந்தேங்கிறது பெருமையான விஷயம்.

இதுல பெரிய சந்தோஷம் என்னன்னா எங்க சொந்த ஊர்ப் பக்கம் சிலர் தீரன் அதிகாரம் ல நடிச்சிருக்கீங்கதானேன்னு என்னை அடையாளம் கண்டுக்கிட்டு விசாரிச்சதுதான்!
கோலிசோடா 2 பெரிய படம். அதுல நடிச்சிருந்தேன். அந்த படம் மூலமா பாலாஜி சக்திவேல் டைரக்ஷன்ல ‘யார் இவர்கள்’ங்கிற படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சுது. அந்த படமும் சீக்கிரமே ரிலீஸாகும்!

அடுத்ததா கவண். ஏதோ மின்னல் மாதிரி வந்தோம் போனோம்னு இல்லாம அதுல என்னை மத்தவங்க அடையாளம் கண்டுக்கற மாதிரியான கேரக்டர். நான் அறிமுகமானதுனு பார்த்தா விஜய் சேதுபதியோட காதலும் கடந்து போகும் படத்துல. கவணும் அவர் படம்தான்.

அடுத்ததா 96. அதுல விஜய் சேதுபதியோட கல்லூரிக் கால நண்பர்கள்ல ஒருத்தரா எனக்கு ஒருகேரக்டர். அதென்னவோ அடிக்கடி விஜய் சேதுபதி அண்ணா கூட நடிக்கிற வாய்ப்பு அமையுது. அந்த படங்கள் எனக்கு நல்ல அடையாளத்தையும் தருது.

காலாவுலயும் நடிச்சிருந்தேன். வழக்கம்போல கவர்ன்மென்ட் ஆபீசர் கேரக்டர்தான். ‘யார் நிலம் யார் நிலம்’னு ஒரு பாட்டு வரும். கதையோட நகர்கிற பாட்டு அது. அதுலயும் வந்தேன். அடுத்து அந்த படத்தோட வில்லன் நானா படேகரை பூமி பூஜைக்காக கூட்டிட்டு வர்ற மாதிரியான காட்சி ஒண்ணு. அதுல அவரை கூட்டிட்டு வர்றது நான்தான். கேரக்டர் எதுவா இருந்தா என்ன? சூப்பர் ஸ்டார் படத்துல சான்ஸ். அதுல நானும் இருந்தேங்கிறதே பெருமை.

காலாவுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரோட 2.0 ரிலீஸாகியிருக்கு. அதுல செல்போன் டவர் மேனேஜரா ஒரு கேரக்டர் பண்ணேன். தமிழ் சினிமாவுல முதல் பெரிய பட்ஜெட் படம். ஷங்கர் டைரக்ஷன். தமிழ், ஹிந்தினு ரெண்டு மொழிகள்ல ஷூட் பண்ணாங்க. நான் நடிச்சதெல்லாம் எடிட்டிங்ல போய்ட்டாலும் தமிழ்ல ஒரு ஹாலிவுட் படம்னு பேசப்படற அளவுக்கு ரிச்சாகியிருக்கிற ஒரு படத்துல நானும் நடிச்சேன்கிறது ரொம்ப பெரிய கெளரவமா நினைக்கிறேன்.

மிக சமீபமா ரிலீஸான திமிரு புடிச்சவன்ல கலெக்டர் ரோல். தேசியக் கொடியேத்த என்னைக் கூப்பிட்டிருப்பாங்க. அப்போ காவல் துறை உயர் அதிகாரியான விஜய் ஆண்டனி ‘கலெக்டர்கள் கொடியேத்துறது வழக்கமான ஒண்ணு. இன்னைக்கு இவர் ஏத்தட்டுமே’ங்கிற மாதிரி என்கிட்டே சொல்லிட்டு தனக்கு கீழே வேலை செய்ற கான்ஸ்டபிளை கொடியேத்த வைப்பார். படத்துல முக்கியமான, நெகிழ்ச்சியான சீன் அது. அந்த சீன்ல ஹீரோவை கவனிக்கிற ஆடியன்ஸ் என்னை மிஸ் பண்ணவே முடியாது” என உற்சாகமாகச் சொன்னவர், தான் இதுவரை நடித்த படங்களின் பட்டியலை நம் வசம் கொடுத்தார்.

காதலும் கடந்து போகும், ஒருநாள் கூத்து, தொடரி,ரெமோ, காஸ்மோரா, அந்தமான், என்னோடு விளையாடு, கவண், ஹரஹர மகாதேவகி, தீரன் அதிகாரம் 1, திருட்டுப் பயலே 2, தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி, விசிறி, பாடம், காலா, கோலி சோடா 2, டிக் டிக் டிக், 96,வடசென்னை, திமிரு புடிச்சவன், டைட்டானிக் காதலும் கவுந்துபோகும், 2.ஓ, அடங்காதே, சங்கத் தலைவன், சத்ரு, அகவன், யார் இவர்கள், வானரப்படை… என அந்த பட்டியல் நீள்கிறது.

”நான் நடிச்ச படங்களோட எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 தாண்டும். இது தவிர பெயரிடப்படாத இன்னும் சில படங்கள்லயும் நடிச்சுக்கிட்டிருக்கேன். ஆனாலும் இதுவரை ரிலீஸானதுல ஐந்தாறு படங்கள்தான் என்னை நாலு பேருக்கு அடையாளம் காட்டுறதா அமைஞ்சுது.

வடசென்னைல எனக்கு ஹீரோ கூட எனக்கு நேரடிக் காட்சி. சில நடிகர்களுக்கு அடைமொழியா அவங்க நடிச்ச முதல் படத்தோட பெயர் ஒட்டிக்கும் இல்லையா? அதேபோல என் பெயருக்கு முன்னால ‘வடசென்னை’ ராம்குமார் போட்டுக்கலாம்கிற அளவுக்கு அந்த படம் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு!

அதேபோலதான் ‘திமிரு புடிச்சவன்’லயும் அமைஞ்சுது. அடுத்தடுத்து வரப்போற படங்கள்லயும் எனக்கு பெயர் கிடைக்கிற மாதிரியான கேரக்டர்கள் கிடைச்சிருக்கு. எல்லாமும் அடுத்தடுத்து ரிலீஸாகும். எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்” என்று சொல்லும் ராம்குமார் பழனி, திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது குறும்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வித்தை, ஆருடம், அக்டோபர் 1, நிகழ்வுகள், தீர்ப்பு, நீதி ஒரு தரம், ஸ்டிரீட் லைட், எதிர்ப்படு, கெத்து, பிட்டு, வான் அவள், இறவாத இயக்குநர், கர்மயுத்தம், தூங்க்குமூஞ்சி, டார்க் ஹேண்ட், ஜித்து, புகைப்படம், T.N. 234, கல்வி, மஹாலெஷ்மி, சேவ் ஃபேஸ் -இதெல்லாம் ராம்குமார் பழனி நடித்துள்ள குறும்படங்களின் பட்டியல்.

”வித்தைங்கிறது 20 நிமிடங்கள் ஓடுற குறும்படம். அந்த படத்துக்கு நம்மூர்லேருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிறைய விருதுகள் கிடைச்சுது. அதேபோல நிகழ்வுகள்ங்கிற குறும்படமும் எனக்கு பெரியளவுல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. டெல்லி கணேஷ், பரத் கல்யாண் அவங்க இரண்டு பேரோட ஃபேமிலிக்கு இடையில நடக்கிற கதை. ஒரு மணி நேரம் ஒடக்கூடிய அந்த படத்துல நான் வில்லனா பண்ணிருந்தேன். அந்த படம் திரையிட்டப்போ நிறைய பெரிய டைரக்டர்ஸ் வந்து பார்த்தாங்க. என்னோட நடிப்பையும் பாராட்டினாங்க” என்று பெருமிதப்படும் ராம்குமார் பழனி தன் நடிப்புக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து விருதுகள் பெற்று வருகிறார்.

சிறந்த துணை நடிகருக்கான ‘அலெக்ரியா’ விருது பெற்றபோது…
’96’ படத்தின் தயாரிப்பாளர் கையால் விருது பெற்றபோது…

அந்தவகையில் அலெக்ரியா ஹாலிடே ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் பல்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் விருதானது ’96’ மற்றும் இன்னும் சில படங்களில் நடித்ததற்காக ராம்குமார் பழனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ’96’ படத்தில் நடித்ததற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரிடமிருந்தும் விருது பெற்றுள்ளார்.

ராம்குமார் பழனி சின்னத்திரை தொடர்களையும் விட்டு வைக்கவில்லை.சன் டிவியின் இ.எம்.ஐ., தெய்வமகள், பாசமலர், சந்திரலேகா, வம்சம், விஜய் டிவியின் தெய்வம் தந்த வீடு, கல்யாணம் முதல் காதல்வரை, சரவணன் மீனாட்சி சீஸன் 3, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தலையணைப் பூக்கள், மெல்லத் திறந்தது கதவு என ஒரு டஜன் சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள ராம்குமார் பழனி இரண்டு வருடங்கள் முன் சிந்தாமணி என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டிருக்கிறார். சிந்தாமணி பிசியோதெரபிஸ்ட் பணியிலிருப்பவர்!

நடிப்பு தவிர நேரம் கிடைக்கும்போது கலை இலக்கிய அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிற ராம்குமார் பழனி தான் நடித்துள்ள விளம்பரப் படங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

ஃபோர்டு மோட்டார்ஸ், தேவ் பவர் ஜென் கம்பெனி, பிரிட்டானியா மில்க் பிகீஸ், சென்னை சில்க்ஸ், பூர்விகா மொபைல்ஸ், டெக்கான் ரம்மி, தமிழ் மசாலா, மாலை முரசு நியூஸ் பேப்பர், ஏ ஸ்டார் பில்டர்ஸ், ஹோட்டல் பிரதாப் பிளாஸா, ராம்ராஜ் வேட்டிகள், பானசோனிக் கேமரா, விஸ்டம் எஜிகேஷனல் இன்ஸ்டிடியூஷன், வேல்ஸ் யுனிவர்சிடி என ராம்குமார் பழனி நடித்துள்ள விளம்பரப் படங்களின் லிஸ்டும் பெரிதாக இருக்கிறது!

ராம்குமார் பழனி நடித்துள்ள சில குறும்படங்களை, விளம்பரப் படங்களை கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

Karmayutham – Short Film

Leave a Reply

Your email address will not be published.

15 − fourteen =