24 மணி நேரத்தில் இரத்த அழுத்தம் குறைந்து அமைதி பெருக…

‘உங்கள் பொறுப்பிற்கு எல்லையில்லை’ என்பதை பலரும் சரியாக புரிந்துகொள்வதில்லை; அனைத்திற்கும் பொறுப்பேற்றுவிட்டால் அனைத்து செயலையும் நாமே செய்ய வேண்டுமே என்று பயந்துகொள்கிறார்கள். இதுகுறித்த சரியான புரிதலை வழங்கும் சத்குருவின் இந்த உரை, இதை அனுபவப் பூர்வமாக பரிசோதனை செய்து அதன் அற்புதத்தை உணரவும் வழிகாட்டுகிறது!

சத்குரு:

பொறுப்புக்கு எல்லை கிடையாதுதான். ஆனால் உங்கள் செயலுக்கு எல்லை இருக்கிறது. நீங்கள் சூப்பர் மேனாக இருந்தாலும், உங்கள் செயலுக்கு எல்லை உண்டு. பொறுப்பு வேறு, செயல் வேறு. இந்த வித்தியாசம் புரியாதவர்கள்தான் பொறுப்பு என்றாலே டென்ஷன் ஆகிறார்கள்.

ஏதோ பயிற்சி செய்ததால் அல்ல. வெறும் மனதளவில் உணர்வுப்பூர்வமாக பொறுப்புக்கு எல்லையில்லை என்று பார்த்ததால் மட்டுமே அறுவைசிகிச்சை செய்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டவர்கள்கூட தங்கள் உடல்நிலையில் பிரமிக்கத்தக்க அதிசயங்களை தங்களுக்கு தாங்களே நிகழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

உங்கள் செயல் என்பது உங்கள் திறமைக்குட்பட்டதே. உங்கள் திறமை என்பது எல்லை உடையதுதானே? நீங்கள் மற்றவரை போல செயல்பட முடியாது. அவர் திறமை வேறுமாதிரி உள்ளது.

செயலை நிர்ணயிக்க பல அம்சங்கள் உள்ளன. உங்கள் புத்தி, திறமை, சூழ்நிலை என்று பல அம்சங்கள் உள்ளன.

ஆனால் பொறுப்பை நிர்ணயிப்பது உங்கள் விருப்பம் மட்டும்தானே? எந்த தடையும் இல்லையே.

பொறுப்பு என்றால் செயல் என்று புரிந்து கொள்வதாலேயே பாரம் உணர்கிறீர்கள்.

எல்லாமே நீங்களே செய்துவிட முடியுமா என்ன? பலநேரங்களில் நீங்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே பொறுப்புதானே?

ஆனால் எல்லையற்ற பொறுப்புணர்வில் இருக்கும்போது, உங்கள் செயல் இயல்பாக மலர்கிறது. எந்தத் தயக்கமும், தடுமாற்றமும் இல்லை.

சாலையில் விளையாடும் உங்கள் குழந்தை விழுந்தபோது, ஓடிச் சென்று தூக்கி அணைத்துக் கொள்ளும்போது, எந்த தயக்கமாவது இருந்ததா? இல்லை, ஏன்? அவனுக்கு முழு பொறுப்பேற்றதால்தானே? ஆனால் பக்கத்து வீட்டுக் குழந்தை விழுந்தால் மட்டும் சிலர் முட்டாள்தனமாக கணக்கு போடுகிறார்கள். “என்ன, அவனுக்கு நான் பொறுப்பா?” என்று.

பொறுப்புகளுக்கு உள்ள எல்லைகளை உடைத்தெறிந்தீர்கள் என்றால், உங்கள் செயல் தானாகவே மலர்கிறது. உங்கள் முழு திறமையும் வெளிப்படுகிறது. அதுதானே வேண்டும் உங்களுக்கு.

பொறுப்பை உணரும்போது சூழ்நிலைக்கு எது தேவையோ, அதை நிச்சயம் புத்தியை பயன்படுத்தி செய்துவிடுவீர்கள்.

இப்படி, செயல் என்பதை சூழ்நிலைக்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கும் சுதந்திரம் உங்களிடம் உள்ளது.

பொறுப்புக்குள்ள எல்லைகளை அகற்றிவிட்டால், உங்களால் இயன்றதை நிச்சயம் செய்திடுவீர்கள். உங்களால் இயலாதது என்னவோ எப்படியும் அதை நீங்கள் செய்ய முடியாதுதான். ஆனால் செய்யக்கூடியதை நிச்சயம் செய்திடுவீர்கள்.

நான் பொறுப்பு இல்லை என்பவர்கள் தங்களால் இயன்றதைக்கூட செய்யமாட்டார்கள். இதுபோன்ற உயிர்கள் வாழ்ந்து பயன் என்ன?

இங்கு கூறப்பட்ட எதையுமே நீங்கள் நம்பத் தேவையில்லை, உங்கள் வாழ்வில் நீங்களே பரிசோதனை செய்து பார்க்கலாம்.

“பொறுப்புக்கு எல்லை இல்லை” என்பது ஒரு தத்துவமோ, போதனையோ கிடையாது, அடிப்படையான உண்மை.

இந்த உண்மையை நீங்கள் பரிசோதிக்க முடியும். வேலை செய்கிறதா, இல்லையா? என்று பார்ப்போமே. வேலை செய்தால் வைத்துக் கொள்ளுங்கள், செய்யாவிட்டால் நாளை முதல் பொறுப்பை விட்டுவிடலாம், போகட்டுமே!

பொறுப்பை எல்லையில்லாமல் உணரும்போது, உங்கள் செயலுக்கான சுவிட்ச் உங்களிடம் உள்ளது. உங்கள் முழு திறமையும் உங்களிடம் வெளிப்படுகிறது. நீங்கள் உங்கள் முழு திறனுக்கு இயங்கும்போது எப்போதுமே ஆனந்தமாகவும், நிறைவோடுமே இருப்பீர்கள்.

நியாயமாகத்தானே கூறுகிறேன்! ஒருபரிசோதனை செய்து பார்ப்போம். இப்போது முதல் அடுத்த 24 மணிநேரம், நீங்கள் எங்கு இருந்தாலும், உங்கள் மனதில் “என் பொறுப்புக்கு எல்லை இல்லை” என்பதை அனுபவபூர்வமாகப் பாருங்கள். உணர்வுப்பூர்வமாக ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுக்க வேண்டும்.

காலை டிபன் சாப்பிடும்போது அதற்கு கவனத்துடன் பதில் கொடுங்கள். சுவாசிக்கும் காற்றுக்கு, தெருவில் போகும்போது பார்க்கும் மரத்திற்கு, வீட்டில் சேட்டை செய்யும் குழந்தைக்கு, ஒவ்வொன்றுக்குமே “நான் பொறுப்பு – என் பொறுப்பிற்கு எல்லை இல்லை” என்று உணர்வுப்பூர்வமாக பாருங்கள்.

உண்மையாகவே என் பொறுப்புக்கு எல்லையில்லை என்று நீங்கள் உணரும்போது உங்களுக்குள் பல மாற்றங்கள் உணர முடியும். என் அனுபவத்தில் எவ்வளவோ பேரை பார்த்திருக்கிறேன். மனதளவில் மட்டும் அல்லாமல் உடலளவில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட்டவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்கள். ஏதோ பயிற்சி செய்ததால் அல்ல. வெறும் மனதளவில் உணர்வுப்பூர்வமாக பொறுப்புக்கு எல்லையில்லை என்று பார்த்ததால் மட்டுமே அறுவைசிகிச்சை செய்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டவர்கள்கூட தங்கள் உடல்நிலையில் பிரமிக்கத்தக்க அதிசயங்களை தங்களுக்கு தாங்களே நிகழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

அடுத்த 24 மணிநேரத்தில் பரிசோதனை செய்து பாருங்கள். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்கள் மனதில் “என் பொறுப்புக்கு எல்லை இல்லை” என்பதை அனுபவப்பூர்வமாகப் பாருங்கள். உணர்வுப்பூர்வமாக ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுக்க வேண்டும்.

24 மணிநேரத்தில் உங்கள் இரத்த அழுத்தம் குறைந்துவிடும், அமைதி பெருகும், அன்பு மலரும், ஆனந்தம் துளிர்விடும். இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.

அற்புத வாழ்வின் அடித்தளத்தை அமைக்க தாமதிக்க வேண்டாம். வாருங்கள் உங்களில் மலருங்கள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *