சண்டைக்கோழி 2 வில் சக்தி விஷாலுக்கு இணையாக என்னை பிரம்மாண்டமாக காண்பித்திருக்கிறார்-நடிகர் வரலக்ஷ்மி

கீர்த்தி சுரேஷ் பேசும்போது

சண்டைக்கோழி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்துடன் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், முதல் பகுதியில் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். இயக்குநர் லிங்குசாமி கதைக் குறும்போதே நடித்தும் காட்டுவார். கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு ஒரு சில படங்களில் மட்டுமே அமையும். இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பை இயக்குநர் லிங்குசாமி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ராஜ்கிரணுடன் ரஜினி முருகனில் நடித்திருக்கிறேன்.

ஆனால் இருவருக்கும் அவ்வளவாக காட்சிகள் இல்லை. இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியென்றாலும் நச்சென்று இருக்கும். வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது. அந்தளவு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மதுரை தமிழை எப்படி பேச வேண்டுமென்று பிருந்தா சாரதி கற்றுக் கொடுத்தார். முதல் இரண்டு மூன்று நாட்கள் உடல் மொழியுடன் பேசி நடிக்க சிரமம் இருந்தாலும், என்னால் முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டப்பிங் பேசியிருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதல் படம். இப்படத்தில் இடம்பெறும் ‘கம்பத்து பொண்ணு’ பாடல் என்னுடைய அபிமானப் பாடல். என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. விஷாலின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் பேசினார்.

லிங்குசாமி பேசும்போது

இப்படத்தைப் பற்றி ஏதும் பேசாமலேயே வெளியிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் உண்மையான உழைப்பிற்கு எப்போதும் மரியாதை உண்டு. ஒரு படத்தோட வெற்றி என்பது அப்படத்தில் நடிக்கக் கூடியவர்களின் மனநிலையைப் பொறுத்தே அமையும். ‘ஆனந்தமும்’ அப்படித்தான். ‘பையா’ வாகட்டும், ரன் ஆகட்டும், சண்டைக்கோழி முதல் பகுதி, வேட்டை என்று எனக்கு தவறாக அமைந்த படமானாலும், சரியாக அமைந்த படமானாலும் அந்தப் படத்தில் இருக்கும் குழுக்களின் மனநிலை தான் காரணம் என்று நினைக்கிறேன்.

ஒரு ஹீரோ எந்தளவு அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறாரோ அதைப் பொறுத்து தான் அந்த படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

ராஜ்கிரணை சண்டைக்கோழி முதல் பகுதியில் பார்க்கும்போது பயந்திருக்கிறேன். ஆனால் வெளியே காட்டிக் கொண்டது கிடையாது. ஆனால் இந்த படத்தில் மரியாதைக் கூடியிருக்கிறது. முனீஷ் காந்திற்கு கற்பனை வளம் இருக்கிறது. சில காட்சிகளில் அவராகவே வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார். சக்தி ஒளிப்பதிவைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நானே கேட்டாலும் அவரிடம் தேதி இருக்காது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை. இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் கார்த்தி குரல் கொடுத்திருக்கிறார். முதலில் நாசர் தான் பேசினார். அவரும் இப்படத்தில் இருப்பாரோ என்று தோன்றக் கூடாது என்று கார்த்தியை பேச வைத்தோம். பிருந்தா சாரதி எனக்கு பெரிய பலம். சினிமாவைத் தாண்டி அவர் என்னுடைய நண்பர்.

வரலக்ஷ்மியைப் பற்றி நான் பேச மாட்டேன். ஏனென்றால், படத்தைப் பார்த்த பிறகு மற்றவர்கள் பேசுவார்கள். மேலும் நேரம் தவறாமை என்ற நற்பண்பு அவரிடம் உண்டு. சண்டைக்கோழி முதல் பகுதியில் மீரா ஜாஸ்மினிடம், நீ சாவித்திரி மாதிரி வருவாய் என்று கூறினேன். ஆனால் இரண்டாம் பகுதியில் சாவித்ரியாகவே வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறைந்த நேரத்தில், குறைந்த படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். அவர் சிறு வயதில் அம்மாவிடம் கூறியது போல் தேசிய விருது பெற்றுத் தருவார்.

விஷால் தயாரிப்பாளராக பொறுமையாக இருந்திருக்கிறார். படத்தில் மட்டுமல்லாது எல்லா விஷயங்களிலும் என்னை நம்புவார். எல்லா வகையிலும் என்னால் அவரை சமாதானப்படுத்த முடியும்.

சண்டைக்கோழி 3 விரைவில் ஆரம்பமாகும். 13 வருடம் வரை காத்திருக்க முடியாது. அதிகபட்சமாக 3 மாதங்கள் தான் காத்திருக்க முடியும். மூன்றாம் பகுதியையும் இதேக் குழுவுடன் தான் இயக்குவேன். விஷாலை வைத்து வேறு எடுக்கத் தோன்றவில்லை.

சென்ற படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ஏதோ தவறு செய்திருக்கிறேன். எல்லா தவறும் என்னுடையது தான்.

இவ்வாறு லிங்குசாமி பேசினார்.

வரலக்ஷ்மி பேசும்போது

இந்தப் படத்தில் விஷாலுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு பெண்ணுக்கான உரிமையைக் கோரும் பேச்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சக்தி விஷாலுக்கு இணையாக என்னை பிரம்மாண்டமாக காண்பித்திருக்கிறார். கீர்த்தியுடன் எனக்கு இரண்டாவது படம். சர்காரிலும் நடித்திருக்கிறோம்.

ஆனால் இரண்டு படத்திலும் எங்கள் இருவருக்கும் இணையான காட்சிகள் இல்லை. அதேபோல் முனீஷ்காந்த் மற்றும் கஞ்சா கருப்பு இருவருடனும் காட்சிகள் இல்லை. ராஜ்கிரணுடன் நடிக்கும்போது இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் இல்லை என்றார். ஆகையால் சிரத்தையுடன் பணியாற்றி இறுதிக் கட்டக் காட்சிகளில் அதை நிறைவேற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

விஷால் தயாரிப்பாளராக அதிக செலவு செய்திருக்கிறார். திருவிழா ‘செட்’ அமைத்தது உண்மையான திருவிழாவாகவே இருந்தது. நடிப்பைப் பொறுத்தவரை நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் சிரித்துக் கொண்டே இருந்ததால் நிறைய ‘டேக்’ வாங்கினோம்.

இவ்வாறு வரலக்ஷ்மி பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *