ஓட்டு சாவடியில் சரவெடி… சர்கார் திரை விமர்சனம்

நடிகர்கள்:  விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத்
இயக்கம் – ஏஆர். முருகதாஸ்

இசை  – ஏஆர். ரஹ்மான்

தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்

கதை எப்படி..?

வெளிநாட்டில் ஒரு கம்பெனியில் சிஈஓ-ஆக மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் விஜய்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், ஓட்டு போட சென்னைக்கு வருகிறார். இவர் பிரபலமானவர் என்பதால் ஒட்டு மொத்த மீடியாவும் இவரின் பேட்டிக்காக காத்திருக்கிறது.

அப்போது தான் இவரது ஓட்டை யாரோ ஒரு நபர் போட்டு விட்டார் எனத் தெரிய வருகிறது. இதனால் கடுப்பாகும் விஜய், கோர்ட் வரை செல்கிறார்.

இது ஒட்டு மொத்த மீடியாவிலும் தெரிய வர பிரச்சினை பெரிதாக அரசியல்வாதிகளுக்கும் விஜய்க்கும் மோதல் முற்றுகிறது.

இதனையடுத்து அரசியல் களத்தில் குதித்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? விஜய் எம்எல்ஏ ஆனாரா? முதல்வர் ஆனாரா? அரசியலில் நேர்மையாக இருந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் நடிகைகளின் பங்களிப்பு எப்படி..?

படத்தின் ஆரம்ப காட்சி முதல் க்ளைமாஸ் வரை சர்காரை தன் கட்டுக்குள் வைத்துள்ளார் விஜய். நிதானமாக சொல்லி அடித்து கில்லி ஆடியுள்ளார்.

ப்ளே பாய் என முதலில் சொல்வதால் அதற்கான ஒரு பாடலை வைத்துவிட்டார்கள்.

புகை பிடிக்கும் காட்சிகள் படத்தில் இருக்காது என முதலில் கூறப்பட்டாலும் ஏகப்பட்ட சிகரெட்டுகளை பிடித்துக் கொண்டே இருக்கிறார் விஜய்.

படம் முழுவதும் ஆக்சன், ஸ்டைல் என மாஸ் காட்டுவதால் கீர்த்தி சுரேஷ் உடன் கூட ரொமான்ஸ் செய்யவில்லை. பாவம் அவரும் என் மேல் ஈர்ப்பு இருக்கிறதா? என்றும் கேட்கும் அளவுக்கு இறங்கி விட்டார்.

கீர்த்தி சுரேஷ் சில காட்சிகளில் வந்து செல்லும் வழக்கமான நாயகி ஆகிவிட்டார். வரலட்சுமி இதில் தைரிய லட்சுமியாக ஜொலிக்கிறார்.

ராதாரவி மற்றும் பழ கருப்பையா இருவரும் நிஜ அரசியல்வாதிகளை போல் வெளுத்து கட்டியிருக்கிறார்கள். ஆனால் விஜய் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்பதால் அவரிடம் இவர்களின் அரசியல் பலிக்கவில்லை.

யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் சிரிப்பில் மன நிறைவைத் தருகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எப்படி.?

ஓஎம்ஜி பெண் என்ற பாடலை நன்றாக படமாக்கியிருந்தாலும் தேவையில்லாத இடத்தில் வருகிறது.

சிம்டாங்காரன் பாடல் வெளியானபோதே நெகடிவ் விமர்சனத்தை பெற்றது. பேசாமல் படத்திலும் அந்த பாட்டை நிறுத்தியிருக்கலாம். அதை வைத்து ரசிகர்களை சோதித்து உள்ளனர். பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஆனால்
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 2ஆம் பாதியில் காட்சிகளை வெட்டி விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களையும் கிண்டல் செய்துள்ளனர்.

ஒரு நாள் இந்த அரசு மக்களுக்கு பதில் சொல்லனும் என ஒருவர் கேட்க, நீங்கத்தான் இன்னும் கேள்வியே கேட்கலையை பின்னர் எப்படி பதில் வரும் உள்ளிட்ட வசனங்கள் நம்மையும் கேள்வி கேட்கிறது.

49O போல 49P சட்டத்தை மக்களுக்கு புரிய வைத்துள்ளார் முருகதாஸ். நம் ஓட்டை ஒருவர் போட்டுவிட்டால் நாம் நீதிமன்றம் சென்று முறையிடலாம் என ஆணித்தரமாக சொன்ன முருகதாஸ்க்கு ஆயிரம் லைக்ஸ் போடலாம்.

இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இடைவேளைக்கு பின்னர் மாயமாகிவிட்டது தான் பாவம்.

பரபரப்பாக அரசியலை சொல்லிவிட்டு லாஜிக் எதையும் பார்க்காமல் க்ளைமாக்ஸையும் நார்மலாக என்று முடித்துவிட்டார் முருகதாஸ்.

சர்கார்… ஓட்டு சாவடியில் சரவெடி

Leave a Reply

Your email address will not be published.

5 × 1 =