சீமராஜா திரை விமர்சனம்

நடிகர்கள்:  சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்
இசை – இமான்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
இயக்கம் – பொன்ராம்
தயாரிப்பு – 24ஏஎம். ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா

கதை எப்படி..?

சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பம் சிவகார்த்திகேயன் குடும்பம். இவரது அப்பா நெப்போலியன். இவருக்கு ஒரு தாத்தாவும் இருக்கிறார்.

1952ஆம் ஆண்டில் இந்திய சட்டப்படி அதிக சொத்துக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் நிலங்களை ஏழைகளுக்கு கொடுத்துவிட வேண்டும் என சட்டம் வருகிறது.

அதன்படி தன் சொத்துக்களை ஊருக்கு கொடுக்கிறது நெப்போலியன் குடும்பம்.

இதனால் அந்த ஊரே அந்த குடும்பத்திற்கு காலம் காலமாக மரியாதை கொடுத்து வருகிறது. எனவே குதிரை வண்டியில் ஊரை வலம் வருவது சீமராஜா வழக்கம்.

இது ஒரு பக்கம் இருக்க பக்கத்து ஊரான புளியம்பட்டியை சேர்ந்த சமந்தாவை காதலிக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஏற்கெனவே புளியம்பட்டிக்கும் சிங்கம்பட்டிக்கும் மார்க்கெட் சந்தை போடுவதில் பிரச்சனை இருந்து வருகிறது.

இதனால் சிவகார்த்திகேயனுக்கும் புளியம்பட்டியை சேர்ந்த சிம்ரன் லால் ஆகியோருக்கும் மோதல் முற்றுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? சிவகார்த்திகேயன் என்ன செய்தார்? சமந்தாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

படத்தில் நடித்தவர்கள் எப்படி..?

படம் முழுக்க சிவகார்த்திகேயன் ராஜ்ஜியம்தான் இந்த சீமராஜா. சமந்தாவுடன் லவ், சூரியுடன் காமெடி, சிம்ரனுடன் மோதல், நெப்போலியுடன் பாசம் என கலந்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதிலும் ஒரு ப்ளாஷ்பேக் காட்சியில் கடம்பவேல் ராஜாவாக கெத்து காட்டியிருக்கிறார். வேடமும் நன்றாக பொருந்தியிருக்கிறது. ஆனால் இதன் மூலம் டைரக்டர் என்ன சொல்ல வருகிறார்? என்பதுதான் புரியவில்லை.

சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காமெடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் முந்தைய படங்களில் இருந்த அளவுக்கு இதில் இல்லை என்பதை மறுக்க முடியாது.

கணக்குபிள்ளை என்றால் அந்த மாதிரி நினைச்சியா? என கபாலி டயலாக்கை பேசி சூரியின் சிக்ஸ் பேக்கு அறிமுகம் கொடுத்துள்ளார் சிவா.

அவரும் அதாவது சூரியும் அதற்கான உழைப்பை கொடுத்துள்ளார் என்பதால் பாராட்டலாம். ஆனால் அப்படியிருந்தும் சிவா தானே கபடி போட்டியில் ஜெயிக்கிறார்?

சிலம்பம் சுற்றும் பீ.டி. ஆசிரியையாக வருகிறார் சமந்தா. இவரும் நிஜமாகவே சிலம்பம் சுற்ற கற்றுள்ளார் என்பதால் இவரையும் பாராட்டலாம்.

சிம்ரனை அடிக்கும்போது சிலம்பம் சுற்றியுள்ளார். ஆண்களுடன் மோதும்போது நம்ம சீமராஜா வந்து கெடுத்து விடுகிறார்.

வில்லியாக சிம்ரன் மிரட்டியிருக்கிறார். இவர் மலையாள நடிகர் லாலுக்கு 2ஆம் தாரமாக நடித்துள்ளார்.

மன்னர் வேடத்தில் நெப்போலியன். ப்ளாஷ்பேக்கில் அழகு ராணியாக கீர்த்தி சுரேஷ். பிரின்சிபால் கேரக்டரில் மனோபாலா, பயிற்சியாளராகமொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?

கிராமத்து இசைக்கு ஏற்ப வாசித்திருக்கிறார் இமான்.

வாரேன் வாரேன் சீமராஜா பாடல் துள்ளல். ஸ்ரேயா கோஷல் குரலில் ஒலிக்கும் உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களின் ரிங் டோனாக மாறும்.

ஒரு சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் அதை போரடிக்காமல் நிவர்த்தி செய்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். காட்சியை வெகு சிறப்பாக பார்க்கும்படி செய்துள்ளார்.

அரசர் கால கதையை நன்றாக படமாக்கியுள்ளார் பொன்ராம். அதே சமயம் இந்த காட்சிக்கு இவ்வளவு செலவு செய்தும் கதையோட்டத்தில் நன்றாக ஒட்டவில்லை என்பதே வருத்தம்.

திடீரென விவசாயம் பற்றி பேசுகிறார் ஹீரோ. சந்தை கடை பிரச்சினை குறித்து பேசுகிறார். காதலுக்காக ஏங்குகிறார். இதனால் ஒரு குழப்பம் வந்துவிடுகிறது.

ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் பணத்தை தண்ணியாக இறைத்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

ஆக மொத்தம் பொன்ராம் மற்றும் ஆர்.டி.ராஜாவுக்கு இது சிவகார்த்திகேயன் உடன் 3வது படம். இந்த கூட்டணியை வரவேற்கலாம்.

சீமராஜா… கெத்து ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *