சரியான கிறுக்குத்துரை… சீமத்துரைவிமர்சனம்,

சீமத்துரை கீதன் வர்ஷா விஜி சந்திரசேகர், 

நடிகர்கள்:  கீதன், வர்ஷா பொல்லம்மா, விஜி சந்திரசேகர், காசிராஜன்ஆதேஷ் பாலா, நிரஞ்சன், மகேந்திரன்கயல் வின்சென்ட்

இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்
இசை – 
ஜோஸ் ஃப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு – ஜோஸ் ஃப்ராங்க்ளின்
தயாரிப்பாளர் – சுஜய் கிருஷ்ணா

கதை எப்படி?

கருவாடு விற்கும் தொழில் செய்பவர் விஜி சந்திரசேகர். இவரின் ஒரே மகன் கீதன் கல்லூரியில் படிக்கிறான். மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.

ஊரில் சேட்டைத்தனம் பண்ணிக் கொண்டு திரிந்தாலும் மகனுக்கு ஆதராகவே பேசுவார். எவராவது குறை சொன்னால், அவரின் குறையை சொல்லி வாயடைக்க செய்துவிடுவார் விஜி.

ஒரு நாள் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார் கீதா. பார்த்த உடனே காதலும் கொள்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதால் அடிக்கடி சந்திக்கின்றனர்.

வழக்கம்போல ஹீரோவுக்கு அட்வைஸ் எல்லாம் செய்கிறார் ஹீரோயின் வர்ஷா.

ஒரு கட்டத்தில் இவர்களின் நெருக்கம் வீட்டிற்கு தெரிய வர, நாயகனை அடித்து துவைக்கிறார்கள் வர்ஷாவின் தாய் மாமன். இதனால் வேறு வழியின்றி அவன் மேல் பரிதாப்ப்பட்டு வர்ஷாவும் கீதனை காதலிக்கிறார்.

இதனிடையில் வர்ஷாவை பெண் கேட்கிறார் தாய்மாமன். ஆனால் பெண் தர மறுத்து, செருப்பால் அடித்து விடுகிறார் வர்ஷாவின் அப்பா.

அதன்பின்னர் என்ன நடந்தது? தாய் மாமன் என்ன செய்தார்? வர்ஷா கீதன் காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

நாயகன் கீதன் நல்ல உயரம். ஸ்மார்ட். என்னைப் போலவே நீங்களும் அழகா இருக்கீங்க என நாயகன் சொல்லும்போது. அட இது புதுசா இருக்கே என எண்ணத் தோன்றுகிறது. (நாயகன் தன்னம்பிக்கையோ..?)

இவருக்கு இருக்கும் உயரத்துக்கும் நல்ல ஆக்சன் காட்சிகள் வைத்திருக்கலாம். ஆனால் ஹீரோ கடைசி வரை அடி வாங்கி ஜீரோ ஆகிவிட்டார்.

வர்ஷா நல்ல வரவு. அழகான கண்கள். தடித்த உதடுகள். பாவடை தாவணி, காண அரிதான கனகாம்பரம் பூ என அசத்தல். நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

சீனியர் நடிகையான விஜி சந்திரசேகர் நல்ல தேர்வு. கிடைத்த கேரக்டரில் கிடா வெட்டியிருக்கிறார்.

இவர்களுடன் காசிராஜன்ஆதேஷ் பாலா, நிரஞ்சன், மகேந்திரன் , கயல் வின்சென்ட் ஆகியோரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

இசையும் ஒளிப்பதிவும் தான் படத்திற்கு பலம். மற்றபடி கதை, திரைக்கதை எல்லாம் பலவீனம்.

நடிகர்களை வேலை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா? திரைக்கதை நன்றாக இருக்க வேண்டாமா? வெறுப்புதான் வருகிறது.

வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் அதை சுவராஸ்யமாக சொல்ல வேண்டாமா? சீமத்துரை பேரு. ஆனால் முடியல…

கதையும் எந்த காலத்தில் நடக்கிறது என்பது புரியவில்லை.? டேப் ரிக்கார்ட்ர் இருக்கு. 1980 பாடல்கள் ஒலிக்கிறது. ஆனால் கயல் பட போஸ்டர்களும் பார்வையில் படுகிறது. ஆனால் ஒருவரிடம் கூட செல்போன்கள் இல்லை.

இது நிச்சயமாக ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அழகான கிராமத்து காதலை அலங்கோலமாக்கி இறுதியில் என்ன செய்வது என்று புரியாமல் க்ளைமாக்ஸை சொதப்பியுள்ளார் டைரக்டர் சந்தோஷ் தியாகராஜன்.

க்ளைமாக்சில் திருப்பம் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மை நோக அடித்துவிட்டார்.

சீமத்துரை… சரியான கிறுக்குத்துரை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *