செத்தும் கொடுத்தானா? கெடுத்தானா? சீதக்காதி விமர்சனம்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, அர்ச்சனா, ராஜ்குமார், வைபவ் அண்ணன் சுனில், பக்ஸ், மௌலி, பார்வதி நாயர், பாரதிராஜா, ரம்யா நம்பீசன், காயத்ரி மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி தரணிதரன்
ஒளிப்பதிவு – சரஸ்காந்த்
இசை – கோவிந்த வசந்த்,
தயாரிப்பு – பேஷன் ஸ்டூடீயோஸ்

கதைக்களம்…

நாடக துறையில் கொடி கட்டி பறப்பவர் அய்யா ஆதிமூலம். நடிப்பின் சிகரம். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருகின்ற போதிலும் நாடகமே தன் உயிர் மூச்சு என வாழ்கிறார்.

மெல்ல மெல்ல நாடகம் தன் மவுசை இழக்கும்போது இவரது பேரன் ஆப்ரேசனுக்கு பெரும் தொகை இவருக்கு தேவைப்படுகிறது.

எனவே என்ன செய்தார்? சினிமாவில் நடித்தாரா? எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றினார்? என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

இது விஜய்சேதுபதியின் 25வது படம் என்றாலும், அவருக்கு பெரும்பாலான காட்சிகள் இல்லை. அது ஏன்? என்பது உங்களுக்கு படம் பார்க்கும்போது புரியும்.

ஆனால் நடித்த காட்சிகளில் நம்மை நிச்சயம் ஈர்க்கிறார். மேக்அப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவரது மேக்அப் மெழுகு சிலை போல தெரிகிறது.

மேலும் நாடக காட்சிகளில் நிறைய வசனங்கள் பேசியே கொல்கிறார்.

வில்லன் சுனில் மற்றொரு நடிகர் ராஜ்குமார் நிச்சயம் ரசிகர்களை விஜய்சேதுதியை விட அதிகம் கவர்கிறார்கள்.

அவர்களின் காட்சிகளில் காமெடிக்கு புல் கியாரண்டி தரலாம்.

அர்ச்சனா, ரம்யா, காயத்ரி, பார்வதி என படத்தில் 4 நாயகிகள். ஆனால் நாலு பேருக்கு வேலையில்லை. விஜய்சேதுபதிக்காக நடித்திருப்பார்களோ? என எண்ணத் தோன்றுகிறது.

ஜட்ஜ் மகேந்திரன் காட்சிகள் நம்பற மாதிரி இல்லை. கருணாகரன் மற்றும் மகேந்திரன் வேடங்களில் வலுவில்லை.

டைரக்டர் மௌலி அனுபவ நடிப்பில் கவர்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி?

96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இதிலும் நம்மை கவர்கிறார். பாடல்களை விட பின்னணி இசையில் காமெடி காட்சிகள் நன்றாகவே ரசிக்க வைக்கிறார்.

அதுவும் ரீ டேக் வாங்கும் காட்சிகளில் நிச்சயம் நம்மை மறந்து சிரிப்போம்.

ஒளிப்பதிவாளரும் தன் பணியில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

நாடகம் சினிமா என தன் லைட்டிங்கில் நம்மை அதிகம் ஈர்த்துள்ளார். ஆனால் எடிட்டர் தான் நம்மை சோதித்து விடுகிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி தரணிதரன்.

பேய் படங்களில் மட்டுமே காட்டப்பட்ட ஆத்மாவை இதில் வேறு கோணத்தில் காட்டியிருப்பது புது முயற்சி. சின்ன விஷயத்தை படம் முழுவதும் கொண்டு சென்ற அவருக்கு பொக்கே கொடுக்கலாம்.

நாடக காட்சிகள் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்குமா? என்பதும்  விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு அந்த ஆத்ம(மா) திருப்தி தருமா?என்பதும் கேள்விக்குறியே.

மொத்தத்தில் சீதக்காதி… செத்தும் கெத்தா வாழ வைத்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *