சீதா ராமம் விமர்சனம் (4.25/5)

சேரவும் முடியாமல், பிரியவும் முடியாமல் ஒரே அளவில் பயணிப்பது தண்டவாளம் மட்டுமல்ல – சிலரின் காதலும் தான் என்ற வாசகத்தை நாம் எங்கோ படித்திருப்போம். அப்படி பட்ட தவிப்பும் ஏக்கமும் தான் இந்த காதல் கதை.

இப்படி ஒரு காதல் நம் வாழ்வில் இருக்காதா? என்ற ஒரு ஏக்கத்தையும் பல தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது காணலாம்.

துல்கர் சல்மான், மிருணால் தாகூர், ரஷ்மிகா மந்தனா, சுமந்த, கவுதம் வாசுதேவ் மேனன், சச்சின் கேதேகர், பிரகாஷ் ராஜ், முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், தருண் பாஸ்கர், பூமிகா என பலரின் நடிப்பில் உருவான காவியக் கதை தான் “சீதா ராமம்”. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். விஜய் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

கதைப்படி..,

தேசபக்தியையும் மதவாதத்தையும் அறவே பின்பற்றும் அஃப்ரீனா (ரஷ்மிகா) லண்டனில் தான் படிக்கும் கல்லூரி உரிமையாளரின் காரை உடைத்துவிடுகிறார். அதற்கு தண்டனையாக 10 லட்சம் ரூபாயை 1 மாத காலத்திற்குள் தருமாறு அஃப்ரீனாவிடம் கேட்கிறார். அப்படி முடியாத பட்சத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கல்லூரி உரிமையாளர் கேட்க, ஒரு இந்தியனிடம் பாகிஸ்தானி பெண்ணான நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் மாறாக காசை தருகிறேன் என்கிறார்.

பின், தனது இறந்து போன தாத்தா தனக்கென ஏதேனும் சொத்து சேர்த்து வைத்துள்ளாரா? என குடும்ப வக்கீலிடம் வினவுகிறார் அஃப்ரீனா. அப்போது, 20 வருடங்களுக்கு முன் ராம்(துல்கர்) எழுதிய கடிதம் ஒன்றை சீதா மகாலட்சுமியிடம் (மிருணால்) ஒப்படைத்தால் தான் அவருக்கு சேர வேண்டிய சொத்து சேரும் என உயில் ஒன்று வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் வக்கீல்.

எனவே அந்த கடிதத்தை ஒப்படைக்க இந்தியா வருகிறார் அஃப்ரீனா. அப்போது 20 வருடங்கள் கழித்து முகவரி தெரியாத சீதா மஹாலட்சுமியை கண்டு கடிதத்தை ஒப்படைத்தாரா? அந்த கடிதத்தில் ராம் எழுதியது என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.

ராம் மற்றும் சீதாவின் காதலை பற்றிய கதையை இந்த விமர்சனத்தில் தெரிவிக்காததன் காரணம். படிப்பதை விட திரையில் இசையுடன் கண்டு உணர்வது தான் சிறந்த தருணமாக இருக்கும் என்பதனால் தான்.

இதிலே படம் எப்படியான ஒரு உணர்வை கொடுக்கும் என்பது இளஞ்சூரியன் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆம், காதலிப்போருக்கு இப்படிப்பட்ட காதலர்களாக இருக்க வேண்டுமென தோன்றும். காதலிக்காதவர்களுக்கு காதலிக்கும் ஆசையை தூண்டும் படம்.

நடிப்பில் அனைத்து கலைஞர்களும் மிக யதார்த்தமாகவும், அளவான நடிப்பையும் வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். 65 மற்றும் 85ஆம் காலத்திற் கேற்றபடியான ஆடை அமைப்பும் இப்படத்திற்கு சிறப்பு சேர்த்தது.

ஆகச்சிறந்த திரைக்கதையை அமைத்தது இயக்குனரின் முதல் வெற்றி. உணர்ச்சிகரமான வசனங்கள் எழுதி இக்கதையை மேலும் சிறப்பாகியுள்ளார் மதன் கார்க்கி. டிஜிட்டல் காலத்தில் வெறும் கடிதத்தை வைத்து சுவாரஸ்யமான ஒரு கதையை எடுப்பதில் இயக்குனர் வல்லவனாக இருக்கிறார்.

என்ன தான் திரைக்கதை, காட்சிபடுத்திய விதம், வசனம் என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும். நம்மை பல இடங்களில் கண்கலங்கச் செய்தது விஷால் சந்திரசேகரின் இசை தான். பாடல்களும் பின்னணியும் அவ்வளவு இனிமை.

மனதை வருடும் காதல், கனமான கதை, வலுவான வசனம், வண்ணங்கள் நிறைந்த காட்சியமைப்பு, இயல்புக்கு மாறான இசை அனைத்தின் சங்கமம் தான் “சீதா ராமம்”.

சீதா ராமம் – டிஜிட்டல் காலத்தில் எடுக்கப்பட்ட லெட்டர் கதை.

Leave a Reply

Your email address will not be published.

19 + fifteen =