கதை திருட்டு புகார்; முருகதாஸ் கவனமாக இருக்க கஸ்தூரி வலியுறுத்தல்
பிரபல நடிகையான கஸ்தூரி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மீ டூ விவகாரம் பற்றியும் சர்கார் கதை திருட்டு முருகதாஸ் பிரச்சினை குறித்தும் பேசினார்.
அவர் பேசியதாவது…
பிரபலமாக இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதால்,ஒரு பெண்ணின் தரம் உயருவதில்லை.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் கூட அதை வெளியில் கூறுவதில்லை.
சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற தவறான குற்றச்சாட்டைப் பெண்கள் கூறுவதாக சிலர் கூறுகிறார்கள்.
‘மீ டூ’ வந்ததால் தான் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தைரியம் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டில் பணமோ, பதவியோ இல்லாமல் பெரிய மனிதர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமா ? பாலியல் குற்றச்சாட்டு மட்டுமல்ல, லஞ்சப் புகார் கூட கூற முடியாது. என்றார்.
மேலும் கூறியதாவது…
பெண்களுக்கு எல்லா இடத்திலும் சமத்துவம் கிடைப்பதில்லை.
சினிமா துறையில் கூட மேக்கப், லைட் மேன் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதியில்லை.
ஒரு சினிமாவின் கதையை காப்பியடித்து, மற்றொரு சினிமா எடுப்பது அடிக்கடி நடக்கிறது.
பெரிய நடிகர்கள் நடித்த சினிமாக்கள்கூட, வேறு படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இயக்குநர் முருகதாஸ், ஒரு ஹாலிவுட் படத்தின் கருவை எடுத்து கஜினி படத்தை எடுத்தார்.
முருகதாஸ் மீது மட்டும் தொடர்ச்சியாக கதை திருட்டு புகார்கள் எழக் காரணம் என்ன? எனவே, அவர் இனியாவது கவனமாக இருந்து, குற்றச்சாட்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.