தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் (11.11.2018 அன்று) தொகுதி II க்கான முதனிலைத் தேர்வினை நடத்தியது. அதில் அனுமதிக்கப்பட்ட 6,26,970 விண்ணப்பதாரர்களில் 4,62,697 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது தேர்வாணையம்.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்திற்கும் முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து 03.11.2018 நாளிட்ட செய்திக்குறிப்பில் இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத்தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், தற்போது தொகுதி II க்கான முதனிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்திற்கும் கூடுதலான கால அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் 23.02.2019 அன்று முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

முதன்மைத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 15194 விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 24.12.2018 முதல் 10.01.2019 வரை பதிவேற்றம் செய்யவேண்டும்.

மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தை 24.12.2018 முதல் 10.01.2019 வரை இணையவழியே (www.tnpscexams.net) மட்டுமே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத / விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே 23.02.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த (அறிவிக்கை எண் 33/2018; நாள் 14.11.2018) பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *