சிம்பு படத்திற்கு தடை போடும் விஷாலை கண்டிக்கும் ரசிகர்கள்
சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் மூலம் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அப்படதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
பணத்தை திருப்பி தர வேண்டும் அல்லது அடுத்த படத்தில் நடிக்க கால்ஷீட் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் சிம்பு எந்த பதிலும் கொடுக்காத காரணத்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.
தன் நஷ்டத்தை ஈடு கட்டாமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஆனால் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.
அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.
இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து சிம்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.