தடுமாற்றக்காரன்… திமிரு புடிச்சவன் விமர்சனம்

நடிகர்கள்:  ஹீரோ விஜய் ஆண்டனி, ஹீரோயின் நிவேதா பெத்துராஜ், வில்லன் சாய் தீனா, போலீஸ் சம்பத்ராம், டாக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன், போலீஸ் முத்துராமன் மற்றும் பலர்.
இயக்கம் – கணேசா

இசை  – விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு – பாத்திமா விஜய் ஆண்டனி

கதை எப்படி..?

தம்பி மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

அண்ணனின் ஓவர் டார்ச்சரால் அவரிடம் இருந்து சின்ன வயதிலேயே பிரிந்து செல்கிறார் தம்பி.

சில வருடங்களுக்கு பின்னர் இளைஞராகி பிரபல ரவுடி மீசை பத்மாவுடன் இணைந்து பல குற்றங்களை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் தம்பியை தானே என் கௌண்டர் செய்து கொல்கிறார் போலீஸ் விஜய் ஆண்டனி.

தன் தம்பியை கொன்ற குற்ற உணர்வில் உறக்கம் இன்றி தவிக்கிறார்.

நீ என்னை கொன்றுவிட்டாய். ஆனால் என்னை போல் உருவாகி வரும் சிறார் குற்றவாளிகளை ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் ஒரு ரவுடியை நீ திருத்தி காட்டு என்று சவால்விடுகிறார் தம்பி.

எனவே இந்த சிறார் குற்றவாளிகளை திருத்த முயற்சி செய்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் மீசை பத்மாவை தெய்வமாக நினைத்து அவருடன் பல வாலிபர்கள் உள்ளனர்.

இதனால் மீசை பத்மாவிடம் இருந்து அந்த சிறார்களை பிரித்து அவர்களை திருத்த திட்டம் போடுகிறார்.

இதற்கிடையில் காவல்துறையே லஞ்சத்தில் ஊறிப்போய் கிடக்கிறது. அவர்களையும் திருத்த முயற்சிக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது?, மீசை பத்மா என்ன ஆனார்?, சிறார் குற்றவாளிகள் திருந்தினார்களா? காவல் துறை கலங்கத்தை துடைத்தாரா விஜய் ஆண்டனி? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

ஸ்கெட்ச் படத்தில் ரவுடியாக இருந்து சிறார் குற்றவாளிகளை திருத்துவார் விக்ரம். இதில் போலீசாக இருந்து சிறார்களை திருத்த முயற்சித்துள்ளார் விஜய் ஆண்டனி.

பட போலீஸ்களை தமிழ் சினிமா பார்த்துவிட்டது. அதை வித்தியாசமாக செய்ய முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர்.

ஒரு பக்கம் கம்பீரமாக தன்னை காட்ட முயற்சித்தாலும் மறுபக்கம் சிறார்களுக்கு அட்வைஸ் செய்து நம்மை போரடிக்க வைத்துவிட்டார்.

சரி. கம்பீரம் தான் இல்லை. காதல் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ரொமான்ஸ் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளுங்கள் பாஸ்.

எஸ்.ஐ. போலீஸ் அதிகாரியாக நிவேதா பெத்துராஜ். லோக்கல் போலீஸ், லோக்கல் பாஷை என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். படத்தில் காமெடி இல்லையென்றாலும் இவரே அந்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு காட்சியில் மருத்துவ முத்தம் உள்ளது. ஆனால் அதையும் சரியாக ஹீரோ செய்யவில்லை என்பது வருத்தம்தான்.

மீசை பத்மாவாக வில்லன் கேரக்டரில் சாய் தீனா. பெரிய பெரிய அடியாட்களை வேலை வைக்காமல் சிறார்களை வைத்தே குற்றங்களை செய்து வருகிறார்.

அதற்கு இவர் சொல்லும் காரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

மீசை வைத்தும் மீசை வைக்காமலும் மிரட்டியிருக்கிறார். மீசை எடுப்பதற்காக தன் அப்பனையே கொல்லுவது கொடூரம்.

நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நாம் பார்த்த சம்பத் ராம் இதில் போலீஸ் ஏட்டு.

லட்சுமி ராமகிருஷ்ணன், முத்துராமன் ஆகியோர் உள்ளனர். அவர்களது காட்சிகளில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?

நக நக பாடல் தாளம் போட வைக்கிறது. திமிருக்கே புடிச்சவன் பாடலும் ரசிக்கும் ரகமே. மற்ற பாடல்கள் கவனத்தை ஈர்க்க வில்லை,

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்எம் நாதன் நம்மை கவர்கிறார். ஆனால் எடிட்டர் தான் தன் வேலையை சரியாக செய்யவில்லையோ? என தெரிகிறது.

படத்தின் நீளம் பட வேகத்திற்கு தடையாக உள்ளது.

பிளட் பிரசர், உறக்கமின்மை உள்ளிட்ட நோய்களை விஜய் ஆண்டனிக்கு கொடுத்துள்ளார் டைரக்டர். ஆனால் அது நம்பும் படியாக காட்சிகள் இல்லை.

பழனி மலைக்கு மாலை போட்டுவிட்டு செய்யும் சண்டைக் காட்சி ரசிக்கும்படி இருந்தாலும், அதில் சாமி வருவதாக காட்டியிருப்பது போதுமானதாக இல்லை.

தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனிக்கு நல்ல மார்கெட் உள்ளதால் அவர்களை குறி வைத்து படத்தை இயக்கியுள்ளாரோ? எனத் தோன்றுகிறது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள். அவர்கள் திருந்தினால்தான் குற்றங்கள் ஒழியும் என்பதை சொன்ன கணேசாவுக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம். மற்றபடி திரைக்கதை அமைப்பில் கோட்டை விட்டு விட்டதால் திமிரு புடிச்சவன் நம்மை கவர வில்லை.

தடுமாற்றக்காரன்… திமிரு புடிச்சவன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *