கடலில் பர்ஸ்ட் நைட் சீன்.; வடசென்னை காட்சிக்கு வெற்றிமாறன் வருத்தம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வெளியாகியுள்ள படம் ‘வடசென்னை’.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், ‘வடசென்னை’ படத்தில் மீனவர்களை தவறாக சித்திரித்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
எங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக அவர்களது மனம் புண்படும்படியாகவும் இருப்பதாக சில மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய நோக்கம் எப்போதுமே, எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக அரசியலோ, சினிமாவோ செய்வது அல்ல.
இப்படத்தில் சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சி மீனவ சமுதாயத்தை மிகவும் இழிவாக சித்திரிப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள்.
அக்காட்சியை படத்திலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம்.
தணிக்கைக் குழுவையும் அணுகியுள்ளோம். அவர்கள் அதை எல்லாம் பார்த்து முடித்து, படத்திலிருந்து நீக்குவதற்கு 7 வேலை நாட்களிலிருந்து 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக நாங்கள் நீக்கிவிடுவோம்.
’வடசென்னை’ 2-ம், 3-ம் பாகங்களில் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளையும், அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிற நெருக்கடிகளை விவாதிப்பதும், எப்படி அங்குள்ள இளைஞர்கள் அனைத்து நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்றும் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
இப்படத்துடைய பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் யாராவது தனிப்பட்ட நபரையோ, தனிப்பட்ட சமூகத்தையோ புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.