விஜய்யை போல் அவரது ரசிகர்கள் நடந்துக் கொள்ளவில்லை- பாக்யராஜ்
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ல் வெளியாகிறது.
இப்படத்தின் கதை என்னுடையது என செங்கோல் பட கதை உரிமையாளர் வருண் என்கிற ராஜேந்திரன் வழக்கு தொடுக்க இது பிரச்சினையானது.
தற்போது வருண் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க முருகதாஸ் சம்மதம் சொல்லியிருக்கிறார். இதனால் கோர்ட்டில் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் வருணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடியவர் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ்.
கோர்ட்டில் வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசியதாவது :
சர்கார் கதை விவகாரத்தில் முடிந்தவரை வெளியே பிரச்னை தெரியாமல் சுமூகமாக பேசி தீர்க்க முயற்சித்தேன்.
சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை மறுத்த முருகதாஸ் இப்போது கோர்ட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார். பிரச்னை சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.
அதேசமயம் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். நான் ஏதோ விஜய் படத்திற்கு தடை ஏற்படுத்துவது போன்று என்னையும், எனது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் மிகவும் விமர்சித்தார்கள்.
என் மகனும் விஜய்யின் ரசிகன் தான், விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அதேப்போல் வருணை விட முருகதாஸை எனக்கு நன்றாக தெரியும்.
அப்படி இருக்கையில் எதற்காக வருண் பக்கம் நிற்க வேண்டும். நான் ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கதையை வெளியில் சொன்னேன்.
இதுதொடர்பாக விஜய்யிடம் பேசினேன். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். எனது படம் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லவில்லை, உங்கள் மனதிற்கு எது நியாயமோ அதை செய்யுங்கள் என்றார். விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என பேசினார் பாக்யராஜ்.